பெண்களின் சினைப்பையில் இருக்கும் சிறிய அளவிலான நீர்க்கட்டிகளால், இன்றைய சூழலில் பெருவாரியான பெண்களுக்கு மாதவிடாய் சீர்கேடு ஏற்படுகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பெண்களின் மாதவிடாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அவற்றை மருந்துகள் இன்றி, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றம் மூலமாகவும் சீரமைக்கலாம் என மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
முன்னர் இருந்த காலத்தில், அரிதாகவே சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின. குறிப்பாக, கருத்தரிப்பு சமயத்தில் தான் இந்த பிரச்சனை இருப்பதே கண்டறியப்பட்டது. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் 10-ல் 3 பெண்களுக்கு இந்த சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறுவயதில் அதிகப்படியாக சாப்பிடக் கூடிய இனிப்பு வகைகள் தான் இதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். மேலும், உடல் உழைப்பு குறைவதும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவுகள், பிராய்லர் கோழி, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது இவையும் முக்கிய காரணமாக உள்ளது.
இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு முதலில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல், வாழ்வியல் முறையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, முதலில் உடல் உழைப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சிகளை மேற்கொள்வது பலன் அளிக்கும். மேலும், உணவில் இருந்து முற்றிலும் இனிப்புகளை தவிர்த்து விட வேண்டும். கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம் என சிவராமன் தெரிவித்துள்ளார்.
தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள் கட்டாயம் எடுக்க கூடாது.
அதேபோல மைதா, பச்சரிசி, பிராய்லர் கோழி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
செய்ய வேண்டியவை:
1. லோ கிளைசீமிக் உணவுகளை எடுக்கவும்
2. கைக்குத்தல் புழுங்கல் அரிசி மற்றும் பட்டை தீட்டாத கோதுமை சாப்பிடலாம்.
3. பாரம்பரிய அரிசி வகைகள் மற்றும் சிறுதானியங்கள் அதிலும் குறிப்பாக ராகி, கம்பு அதிகம் எடுத்து கொள்ளவும்.
சினைப்பை நீர்க்கட்டிக்கு தீர்வு | PCOD problem solution by Dr.Sivaraman | Polycystic ovary syndrome
4. பழங்கள் - ஜூஸ் அல்லாமல் பழங்களை மென்று சாப்பிடலாம்.
5. இனிப்பு தேவைப்பட்டால் வெள்ளைச்சர்க்கரை எடுக்காமல் நாட்டுச்சர்க்கரை, தேன் பயன்படுத்தலாம்.
6. வெந்தயம், கருவேப்பிலை, வெள்ளை பூண்டு ஆகியவற்றை தவிர்க்காமல் சாப்பிட வேண்டும்.
7. குழம்பில் வேகவைத்த மீன் சாப்பிடலாம்
8. யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி தினசரி மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.