/indian-express-tamil/media/media_files/2025/08/17/rose-tea-2025-08-17-19-06-49.jpg)
இஞ்சி 'டீ'- க்கு டஃப் கொடுக்கும்... செம்ம ஹெல்தி கூட!
ரோஸ் டீ, அதன் தனித்துவமான நறுமணத்திற்காகவும், உடலுக்கு அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் உலகெங்கிலும் பிரபலமடைந்து வரும் பானம். மனதை அமைதிப்படுத்துவதில் தொடங்கி, சருமப் பாதுகாப்பு வரை, ரோஜா இதழ் ஆரோக்கிய புதையலாக செயல்படுகின்றன. இந்த அற்புதமான பானத்தை எளிதாக வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
உலர்ந்த ரோஜா இதழ்கள்: 1-2 தேக்கரண்டி (அ) புதிய ரோஜா இதழ்கள்: 1/2 கப், தண்ணீர்: 1-2 கப், பனங்கற்கண்டு, தேன் அல்லது சர்க்கரை (தேவைப்பட்டால்), ஏலக்காய் அல்லது இலவங்கப்பட்டை (விரும்பினால்)
ரோஸ் டீ செய்முறை:
புதிய ரோஜா இதழ்களைப் பயன்படுத்தினால், அவற்றை நன்கு சுத்தமான நீரில் கழுவி, உலர வைக்கவும். உலர்ந்த ரோஜா இதழ்களைப் பயன்படுத்தினால், நேரடியாகப் பயன்படுத்தலாம். (உலர்ந்த ரோஜா இதழ்களை நாட்டு மருந்து கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ வாங்கலாம்.) ஒரு பாத்திரத்தில் 1 முதல் 2 கப் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும், அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொதிக்கும் நீரில் ரோஜா இதழ்களைச் சேர்க்கவும். அதன் வாசனை நீருடன் கலந்து, ஒரு அழகான பிங்க் அல்லது சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். இதழ்களைச் சேர்த்த பிறகு, பாத்திரத்தை மூடி சுமார் 5-10 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். இந்த நேரம் தான் ரோஜா இதழ்களில் உள்ள சத்துக்களும், நறுமணமும் நீருடன் நன்கு கலக்கும். ஒரு வடிகட்டியின் உதவியுடன் தேநீரை வடிகட்டி, இதழ்களை அகற்றவும்.
இனிப்பு தேவைப்பட்டால், வடிகட்டிய தேநீரில் பனங்கற்கண்டு, தேன் அல்லது சர்க்கரை சேர்த்து கலக்கவும். கூடுதலாக, ஒரு வித்தியாசமான சுவைக்கு ஏலக்காய் அல்லது இலவங்கப்பட்டை தூளை சேர்க்கலாம். சூடான ரோஸ் டீயை ஒரு கோப்பையில் ஊற்றி, உடனடியாகப் பருகலாம். தேவைப்பட்டால், இதனுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து அலங்கரிக்கலாம்.
ரோஸ் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
ரோஜாவின் நறுமணம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கும். இது செரிமான மண்டலத்தை சீராக இயங்க வைக்கும். ரோஜாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பொலிவாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. வைட்டமின் C நிறைந்திருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த எளிய முறையில், வீட்டிலேயே ஆரோக்கியமான ரோஸ் டீயைத் தயாரித்து, அதன் சுவையையும், ஆரோக்கிய நன்மைகளையும் அனுபவிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.