சுரைக்காய், வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. இந்த முறையில் சுரைக்காயைச் சமைத்து சாப்பிடுவதால், சமச்சீரான உணவுடன் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்க முடியும். அந்த வகையில் சுவையான சுரைக்காய் கூட்டு எப்படி செய்வது என்று இதை எப்படி சுவையாக செய்யலாம் என்று ஆர்.கே.ரெசிப்பீஸ் பவுல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ஒரு முழு சுரைக்காய்
100 கிராம் பாசிப்பயறு
ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம்
இரண்டு தக்காளி
காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்
நான்கு பல் பூண்டு
மஞ்சள் தூள்
உப்பு
அரை டீஸ்பூன் சீரகம்
எண்ணெய்
கடுகு
காய்ந்த மிளகாய்
அரை டீஸ்பூன் இடித்த சோம்பு
கருவேப்பிலை
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
நிறைய கொத்தமல்லி
கொஞ்சம் நெய்
செய்முறை:
முதலில், ஒரு முழு சுரைக்காயைத் தோல் சீவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு குக்கரில் நன்கு அலசிய 100 கிராம் பாசிப்பயறுடன் நறுக்கிய சுரைக்காய், ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், இரண்டு தக்காளி, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், நான்கு பல் பூண்டு, மஞ்சள் தூள், உப்பு, மற்றும் அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளவும்.
சுரைக்காயிலேயே அதிக நீர்ச்சத்து இருப்பதால், குறைந்த அளவு தண்ணீர் ஊற்றி, மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். வெந்ததும், கரண்டியாலேயே நன்கு மசித்துக் கொள்ளவும். தாளிப்பதற்கு, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய் சேர்க்கவும். அரை டீஸ்பூன் சோம்பைத் இடித்துச் சேர்த்தால் வாசனை அருமையாக இருக்கும். அதனுடன் கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கிக் கொள்ளவும். கடைசியாக, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து, இதை கூட்டுடன் சேர்த்துக்கொள்ளவும்.
நிறைய கொத்தமல்லி சேர்த்து, சாதத்துடன் அதிக அளவில் சுரைக்காய் கூட்டுச் சேர்த்துச் சாப்பிடுங்கள். குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது சிறிதளவு நெய் சேர்த்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான சுரைக்காய் கூட்டு உங்கள் தினசரி உணவில் சேர்த்து, உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.