கொண்டக்கடலையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வெள்ளை கொண்டக்கடலையை விட கருப்பு கொண்டக்கடலையில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. கொண்டக்கடலையில் நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து உள்ளது. அந்த வகையில் சத்து நிறைந்த கொண்டக்கடலையில் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
வெந்தயம் - 1 தேக்கரண்டி
இஞ்சி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
சீரகம் - 1 /2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் வரை ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊறவிடவும்.
இப்போது, ஊற வைத்த கொண்டைக்கடலை, பச்சரிசி, வெந்தயம், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். மாவின் அளவுக்கு ஏற்ப மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அடுத்ததாக இந்த மாவை உப்பு சேர்த்து 12 மணிநேரம் வரை புளிக்கவிடவும். பின்பு சீரகம் சேர்த்து கலக்கவும்.
இப்போது, அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடானதும், எப்போது போல் தோவை ஊற்றவும். சுற்றி நெய் ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். அவ்வளவு தான் சத்தான, சுவையான கொண்டைக்கடலை தோசை தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil