நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காயில் பச்சடி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? வாரத்தில் இரு முறை சுரைக்காய் எடுத்து கொள்வதால் என்னென்ன பயன்கள் உள்ளது என்றெல்லாம் பார்க்கலாம். இதுகுறித்து சசி குக்’ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
சுரைக்காயில் சுமார் 96% நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கிறது.
சுரைக்காயில் வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. வயிறு, இதயம் ஆகியவற்றின் நலம் காக்கிறது மற்றும் பல்வேறு ஆரோக்கிய பலன்களை சுரைக்காய் கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும், ரத்த அழுத்தத்தை குறைக்க விரும்புபவர்களும் சுரைக்காயை அதிகம் சாப்பிடலாம்.
அவ்வளவு சத்துக்கள் நிறைந்த சுரைக்காயில் பச்சடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய்
தயிர்
உப்பு
எண்ணெய்
கடுகு
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய்
இஞ்சி
கருவேப்பிலை
சின்ன வெங்காயம்
கொத்தமல்லி தழை
தேங்காய்
செய்முறை
சுரைக்காய் தோல் சீவி சிறிதாக நறுக்கி சிறிது தண்ணீர் தெளித்து 15 நிமிடம் குக்கரில் வேக விடவும். பின்னர் வேக வைத்த சுரைக்காய் எடுத்து மீதமுள்ள தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுந்து, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் வதக்கி வைக்கவும்.
பின்னர் உப்பு, கொத்தமல்லி தழை, தேங்காய் துருவி வைக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் சுரைக்காய், தயிர் மற்றும் வதக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து அதில் சிறிது உப்பு, கொத்தமல்லி தழை, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி சாப்பிடலாம்.
சுரைக்காய் பச்சடி | Bottle gourd pachadi
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது சாப்பாட்டில் சேர்த்து சாப்பிடலாம். மேலும் மீதமான காய் தண்ணீர் மற்றும் தயிர் தண்ணீர் இரண்டையும் சேர்த்து உப்பு போட்டு குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.