பிரியாணி பலருக்கும் பிடிக்கும். சைவம், அசைவம் என சமைத்து சாப்பிடுவோம். சைவத்தில் காளாண் பிரியாணி, வெஜ் பிரியாணி சாப்பிட்டிருப்போம். ஆனால் கத்திரிக்காய் பிரியாணி சாப்பிட்டிருப்போமா? கத்திரிக்காய் பிரியாணி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – 1 கப்
கத்திரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 1 கப்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
புளித்தண்ணீர் – 2 கப்
தக்காளிச் சாறு – கால் கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு
அரைக்க தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 5
தனியா – 1 டீஸ்பூன்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
செய்முறை
சின்னவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டிகொள்ளவும். பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு, நீரை வடிக்கவும்.
இப்போது ஒரு கடாய்யில் நெய்விட்டு சூடானதும் அரிசியை போட்டு வறுத்துக்கொள்ளவும். அதை தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடாக்கி, அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ளவும். அடுத்து குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளிச் சாறு சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் வறுத்து அரைத்த பொடி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வந்ததும் அரிசியைப் போடவும். அரிசி விசில் வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/