/indian-express-tamil/media/media_files/2025/02/04/0lSgodO6ssAFb1Rz23ZN.jpg)
தசை வளர்ச்சிக்கு பப்பாளி மற்றும் மாம்பழங்கள் பயன்படுவதாக டிஜிட்டல் கிரியேட்டர் டெட் கார் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதன் உண்மைத் தன்மை குறித்து அறிந்து கொள்வதற்காக இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பாக உணவியல் நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Can eating papaya, mangoes help you build muscle? Here’s what an expert has to say
"தசை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது புரதங்கள். ஒரு கட்டுமானத்தின் செங்கல் போன்ற பணியை, தசை வளர்ச்சியில் புரதம் மேற்கொள்கிறது. அதன்படி, புரதத்திற்கு மாற்றாக மாம்பழம் மற்றும் பப்பாளி ஆகியவை செயல்பட முடியாது" என ஹோலிஸ்டிக் ஊட்டச்சத்து நிபுணர் & ஆயுர்வேத ஆரோக்கிய பயிற்சியாளர் இஷா லால் தெரிவித்துள்ளார்.
ஆனால், உடல் ஆரோக்கியத்தில் இந்தப் பழங்களின் பங்களிப்புகளை நாம் பார்க்கலாம். அதன்படி, பப்பாளியை 'பழங்களின் தேவதை' என லால் குறிப்பிட்டுள்ளார்.
"பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் இருக்கிறது. இவை புரதத்தை ஜீரணம் செய்ய உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் புரதம் உங்கள் உடலில் திறம்பட பணியாற்ற முடியும். பப்பாளியில் வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை நிறைந்திருக்கிறது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளும் இருக்கிறது. இது உடற்பயிற்சியினால் ஏற்படும் தசைக்காயங்களில் இருந்து மீண்டு வர உதவி செய்கிறது" என லால் கூறியுள்ளார்.
மேலும், "மாம்பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இவை புரதம் இல்லையென்றாலும் உடற்பயிற்சிகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. காருக்கு நிரப்பப்படும் எரிபொருள் போன்று இது செயலாற்றும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் போன்றவையும் காணப்படுகிறது. ஆயுர்வேத ரீதியாக இவற்றில் இருக்கும் ஆற்றல்களையும் லால் விவரித்துள்ளார்.
"உடல் எடை மேலாண்மை மற்றும் தசையின் வளர்ச்சிக்கு புரதம் தேவைப்படுகிறது. புரதத்திற்கு மாற்றாக இல்லாவிட்டாலும் சீரான உணவு முறைக்கு பப்பாளி மற்றும் மாம்பழம் உதவி செய்கிறது. உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல், சீரான செரிமானம், தசை காயத்தில் இருந்து மீண்டு வருதல் போன்றவற்றுக்கு இவை உதவி செய்கின்றன" என்று லால் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பழங்களை எத்தனை முறை சாப்பிடலாம்?
வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை 150 முதல் 160 கிராம் வரை மாம்பழம் சாப்பிடலாம். இதேபோல், 140 முதல் 150 கிராம் வரை பப்பாளி பழங்களை சாப்பிடலாம்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்ன?
மாம்பழம் மற்றும் பப்பாளி ஆகியவை சிறப்பான உணவுகள் தான். ஆனால், அவை புரதத்திற்கு மாற்றாக இருக்காது. சரியான புரதம் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து தான் இவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, இவற்றை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவும் அதிகரிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.