குழந்தைகள் சில நேரம் சாப்பிட அடம்பிடிப்பார்கள். ஏதாவது புது விதமாக அவர்களுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். ஸ்டார் தோசை, மினி இட்லி போன்றவைகள் குழந்தைகளுக்கு பிடிக்கும். ஸ்கூல் செல்கிற நேரத்தில் இந்த மாதிரி ஏதாவது கொடுத்தால் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். அந்த வகையில் குடை மிளகாய் வைத்து புதிய வகையில் ஆம்லெட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். குடை மிளகாயில் வைட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்
குடைமிளகாய் - 1
முட்டை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1 (விருப்பப்பட்டால்)
பச்சை மிளகாய் - 1
கேரட் துருவியது - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
மிளகுத்தூள் - அரை ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாயை மேற்பகுதி மற்றும் கீழ்பகுதி நறுக்கி விட்டு நடுவில் உள்ள விதையை எடுத்து விட வேண்டும். பின்பு அதனை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய குடை மிளகாயை அதில் வைக்கவேண்டும். இருபுறமும் குடைமிளகாயை திருப்பி திருப்பி விட்டு பின்னர் அதனுள்ளே அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு இருபுறமும் மிதமான தீயில் வேக வைத்து எடுக்கவும். ஆம்லெட் வெந்ததும் எடுத்து பரிமாறலாம். அவ்வளவு தான் புது வித ஆம்லெட் ரெசிபி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“