மரவள்ளிக் கிழங்கில் நன்மைகள் நிறைந்துள்ளன. ஆரோக்கிய உணவு வகைகள் உடல் நலத்தை மேம்படுத்தும். சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். நவீன காலத்தில் நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிடவதை தவிர்த்து விட்டோம். கம்பி, கேழ்வரகு, மரவள்ளிக் கிழங்கு, சோளம் இவைகள் உடலுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் இவைகளை செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள். அந்தவகையில் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்த மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
துருவி சீவிய மரவள்ளிக் கிழங்கு – 4 கப்
ஊறவைத்த ஜவ்வரிசி – 2 கப்
தேங்காய் துருவல் – ½ கப்
சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரை – 250 கிராம்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்,
வறுத்து பொடித்த எள் – 5 டீஸ்பூன்
உப்பு – சிறிதளவு
செய்முறை
துருவிய மரவள்ளிக் கிழங்கு, ஊறவைத்த ஜவ்வரிசி இவ்விரண்டையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து உதிரி உதிரியாக பிசறி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து மேல் தட்டில் துணிப் போட்டு உதிர்த்து வைத்துள்ள புட்டு கலவையை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர், புட்டு வெந்த பிறகு எடுத்து ஒரு தட்டில் போட்டு சூடாக இருக்கும் போதே சர்க்கரை (அ) நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், பொடித்த எள் சேர்த்து நன்றாக கலந்து சாப்பிடவும். அவ்வளவு தான் மரவள்ளிக் கிழங்கு புட்டு ரெடி.
மரவள்ளிக் கிழங்கில் சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். வாரம் 2 முறை கொடுக்கலாம். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“