உங்கள் வீட்டில் சப்பாத்தி, இட்லி என்னவாக இருந்தாலும் அதனுடன் கல்யாண வீட்டு சன்னா மசாலா இருந்தால் நட்டுன்னு இருக்கும், செஃப் தீனாவின் சன்னா மசாலா ரெசிபி எப்படி இருக்கிறது பாருங்கள்.
கல்யாண வீட்டு சன்னா மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை மூக்கடலை 1 கிலோ
பட்டை 2 துண்டு
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 2
ஏலக்காய் 2
சோம்பு 1 டீஸ்பூன்
வெங்காயம் 1 கிலோ
தக்காளி 1/2 கிலோ
இஞ்சி 100 கிராம்
பூண்டு 50 கிராம்
பச்சை மிளகாய் 4
மஞ்சள்தூள் 25 கிராம்
தனி மிளகாய்தூள் 4 டீஸ்பூன்
மல்லிதூள் 6 டீஸ்பூன்
சன்னா மசாலா 100 கிராம்
கொத்தமல்லி ஒர் கைப்பிடி
உப்பு தேவையான அளவு
சமையல் எண்ணெய்
வெண்ணெய் 150 கிராம்
செய்முறை:
அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கடாய் எடுத்து வையுங்கள். அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைப் போட்டு வறுத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி வறுத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு எல்லாம் முன்னதாக, வெள்ளை மூக்கடலையை 2 மணி நேரம் ஊறவைத்து 2-3 முறை நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். பிறகு அதை, ஒரு குக்கரில் போட்டு, சிறிது அளவு மஞ்சள் தூள், அரை உப்பு போட்டு வேக வையுங்கள், 3 விசில் வந்த உடன் இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். சன்னா கை வைத்த உடனே அழுந்தி நசுங்கும் பக்குவத்தில் வேக வைத்திருக்க வேண்டும்.
வெங்காயத்தை வறுவலாக வதக்கிய பிறகு, அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்க்க வேண்டும். அடுத்து, தக்காளியை அரைத்து ஊற்றுங்கள். தக்காளி நன்றாக வதங்கியவுடன் மஞ்சள் தூள் போடுங்கள். அடுத்து வெறும் மிளாகாய் தூள் போடுங்கள், அடுத்து மல்லிதூள் போடுங்கள், பச்சை வாசனை போக்கும் வரை கிளறிவிடுங்கள். கொதித்த பிறகு, வேகவைத்த வெள்ளை மூக்கடலையை வேகவைத்த தண்ணீருடன் ஊற்றுங்கள். வெள்ளை மூக்கடலையை லேசாக மசித்துக்கொள்ளுங்கள். இப்போது தேவையான உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கொதித்த பிறகு, சன்னா மசாலாவைப் போட்டு, கலக்கி விடுங்கள். அடுத்து, வெண்ணெய் போடுங்கள், அடுத்து கொத்தமல்லியைத் தூவி விடுங்கள். அவ்வளவுதான் கல்யாண வீட்டு சன்னா மசாலா தயார், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் நச்சுன்னு இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“