சப்பாத்தி கோதுமையில் செய்யப்படுகிறது. பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றன. அதுவும் பன்னீர் பட்டர் மசாலா காம்போவாக இருந்தால் சொல்லவே வேண்டாம். கூடுதலாக 2 சப்பாத்தி சாப்பிடுவர். ஆனால் எல்லா நேரங்களிலும் பன்னீர் செல்ல முடியாது. வேறு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைப்போம். இதற்கு சிம்பிள், ஈஸியாக காலிஃப்ளவர் ரெசிபி செய்யலாம். காலிஃப்ளவரில் புரதச்சத்து, நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சப்பாதிக்கு சேர்த்து சாப்பிட காலிஃப்ளவர் சுக்கா செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 1 பூ
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு.
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். காலிஃப்ளவரை சிறு சிறு பூக்களாக பிரித்து வைக்கவும். கொதிக்க வைத்த நீரில் காலிஃப்ளவர், உப்பு மஞ்சள் தூள் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்பு நீரை வடிகட்டி விடவும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் காலிஃப்ளவர் துண்டுகள் சேர்த்து பிரட்டி விடவும். பின்னர் அதில் மிளகாய்த்தூள், மிளகு, சீரகத்தூள், மல்லித்தூள் அனைத்தும் சேர்த்து பிரட்டி விட்டு சிறிது தண்ணீர் தெளிக்கவும். மூடி போட்டு நன்கு வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கலாம். மசாலா வாசனை போனதும் காலிஃப்ளவர் என அனைத்தும் நன்கு கலந்து வந்ததும் கொத்தமல்லி இலையை சேர்த்து ஒரு முறை கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும். அவ்வளவு தான் சூடான காலிஃப்ளவர் சுக்கா ரெடி. சப்பாதிக்கு சைட் டிஷ்-ஆக வைத்து சாப்பிடலாம்.