குழந்தைகளை சாப்பிட வைப்பது ஒரு பெரிய விஷயம்தான். அவர்களுக்கு பிடித்த உணவாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு இன்று பிடித்த உணவு நாளை பிடிக்காமல் போகலாம். அவர்களின் மனம் அறிந்து ஆரோக்கியம் அறிந்து உணவு கொடுக்க வேண்டும்.
வீட்டில் குழந்தைகள் கவர்ச்சிகரமான துரித உணவுகளைப் பார்த்து, நூடுல்ஸ், பாஸ்தா வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். பேக் செய்து விற்கப்படும் ஆரோக்கியமில்லாத அத்தகை உணவுப் பொருட்களை வாங்கி செய்து கொடுப்பதைத் தவிர்க்கும் அதே நேரத்தில், வீட்டில் இருக்கும் கோதுமை மாவை வைத்து நீங்களே ரொம்ப சுலபமாக செய்துகொடுக்கலாம்.
சப்பாத்திக்கு பிசைந்த மாவில் கொஞ்சூண்டு நூடுல்ஸ் செய்து உங்கள் குட்டீஸுக்கு இப்படி செய்து கொடுங்கள்.
செய்முறை:
ஒரு கப் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். சப்பாத்தி மாவு அளவுக்கு சாஃப்ட்டாக பிசைந்து கொள்ளுங்கள், ரொம்பவும் தண்ணீராக இருக்கக் கூடாது. ஒரு 15 நிமிடம் பிசையுங்கள். பிறகு, உருண்டையாக உருட்டி சப்பாத்தி தேய்ப்பது போல தேயுங்கள், மேலே உதிரி சப்பாத்தி மாவு தூவு மடிப்பு மடிப்பாக மடித்து நூடுல்ஸ் போல கட் பண்ணுங்கள். அவற்றை பிடித்து பார்த்தால் நூடுல்ஸ் போல நீளமாக இருக்கும். இதை நீங்கள் மறுநாள் கூட பயன்படுத்தலாம்.
இப்போது வழக்கம் போல, ஒரு பெரிய பாத்திரத்தில், தண்ணீர் ஊற்றி காய வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் நாம் செய்து வைத்துள்ள நூடுல்ஸை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும் பிறகு, பிறகு சில்லென தண்ணீர் ஊற்றி வடிகட்டிக் கொள்ளுங்கள்.
இதற்கு பிறகு, நீங்கள் வழக்கம் போல, எப்படி நூடுல்ஸ் செய்வீர்களோ அதே போல, இந்த கோதுமை மாவில் செய்த நூடுல்ஸை செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.