நம்முடைய வீடுகளில் இட்லி, தோசைக்குப் பிறகு முக்கிய இடத்தை பிடிக்கும் உணவாக சப்பாத்தி இருக்கிறது. சில சமயங்களில் எல்லோரும் சாப்பிடுவார்கள் என நினைத்து நிறைய சப்பாத்திகளை தயார் செய்து விடுவோம். ஆனால், எப்படியோ கொஞ்சம் சப்பாத்தி மீதம் இருந்து விடும்.
அப்படி மீந்து போன சப்பாத்தியை நிறைய பேர் பாதுகாப்பாக எடுத்து வைத்து, மறுநாள் காலையில் மீண்டும் தோசைக் கல்லில் போட்டு சூடேற்றி சாப்பிடுவார்கள். ஆனால் அப்படி சாப்பிட பலருக்கும் பிடிக்காது. அதனால், மீந்து போன சப்பாத்தியை வைத்து இந்த செய்முறையில் நூடுல்ஸ் செய்யலாம். குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி
முட்டை-4
பெரிய வெங்காயம்-3
தக்காளி-3
இஞ்சி- சிறிதளவு
பூண்டு- சிறிதளவு
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் முட்டையை பொரித்து எடுத்துவைக்கவும். பிறகு சப்பாத்தியை மெல்லிசாக நூடுல்ஸ் போல வெட்டி வைத்துக்கொள்ளவும்.
இதன்பின்னர், ஒரு கடாயை எடுத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி போட்டு வதக்கவும். இவை நன்கு வதக்கியவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மிதமான சூட்டில் வைத்து மூடிவைக்கவும்.
இந்த மசாலாவில் பச்சை வாடை போனவுடன், வெட்டி வைத்திருக்கும் சப்பாத்தி, முட்டைப் பொரியல் போட்டு, மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சூடான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி. முட்டை பிடிக்காத மக்கள் அதனை தவிர்த்துக் கொள்ளலாம்.