சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் ஏற்ற வகையில் ஒரே மாதிரியான மட்டன் கிரேவி எப்படி செய்வது என்று பார்ப்போம். கெட்டியாக சாதத்தோடு சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1.5 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
கறிவேப்பிலை
கொத்தமல்லி தழை
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு (விரும்பினால்) சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்க வேண்டும்.
இப்போது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறவும். மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
நறுக்கிய மட்டன் துண்டுகளைச் சேர்த்து, மசாலாவுடன் நன்கு கலந்து விடவும். 2-3 நிமிடங்கள் வதக்கவும். தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, மட்டனுடன் கலந்து, 5 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும். மட்டனில் இருந்து தண்ணீர் பிரிந்து வரும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மட்டன் மூழ்கும் அளவு), குக்கரை மூடி, 5-6 விசில் வரும் வரை அல்லது மட்டன் நன்கு வேகும் வரை சமைக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், மூடியைத் திறந்து, கிரேவிக்குத் தேவையான கெட்டித்தன்மை வந்ததும், நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைக்கவும்.