நம்மில் பெரும்பாலானோர்க்கு காலை உணவு இட்லி, தோசை தான். ஆனால் தினமும் சட்னி, சாம்பார் என செய்து சாப்பிடுவது சற்று கடினம். அதேநேரம் ஒரு பொடி இருந்தால், சட்னி அல்லது சாம்பாரில் ஒன்று மட்டும் செய்து கொள்ளலாம். இருப்பினும் வழக்கமான இட்லி பொடியை சிலர் விரும்ப மாட்டார்கள்.
உங்களுக்காகவே இருக்கிறது திருநெல்வேலி ஸ்டைல் எள்ளுப் பொடி. ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த எள்ளுப்பொடி ரெசிபியை செஃப் வெங்கடேஷ் பட் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
தேவையான பொருட்கள்
கருப்பு எள் – 100 கிராம்
பூண்டு – 20 பல்
காய்ந்த மிளகாய் – 12
கருப்பு உளுந்து – 50 கிராம்
புளி – 25 கிராம்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
சக்கரை – 1 டீஸ்பூன் (தேவைப்படின்)
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடேறியதும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய வைக்க வேண்டும். காயந்ததும் பூண்டு போட்டு வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கியதும் எண்ணெய் இல்லாமல் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே எண்ணெய்யில் காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இதனை வதக்கிய பூண்டுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் கருப்பு உடைத்த உளுந்தை போட்டு நன்றாக வறுக்க வேண்டும். இதனுடன் புளி சேர்த்து கிளறி விட்டு, ஏற்கனவே வதக்கி வைத்த பூண்டு மிளகாயுடன் சேர்க்க வேண்டும். இதில் உப்பு, பெருங்காயம் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து சூடானதும் கருப்பு எள் போட்டு வறுக்க வேண்டும். நன்றாக பொரிந்ததும் இறக்கி வைத்து தேவைப்பட்டால் சக்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் ஏற்கனவே செய்து வைத்த பூண்டு மிளகாய் உளுந்து கலவையை போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். நன்றாக அரைந்த பின்னர் அதனுடன் வறுத்த எள் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் அருமையான திருநெல்வேலி ஸ்டைல் எள்ளுப் பொடி ரெடி. இந்தப் பொடியை இட்லி அல்லது தோசைக்கு வைத்து சாப்பிட்டால், எக்ஸ்ட்ரா ஒரு இட்லி அல்லது தோசையை சாப்பிடலாம். நீங்களும் உங்கள் வீட்டில் டிரை பண்ணுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.