அசைவம் பலருக்கும் பிடிக்கும். சிக்கன், மட்டன், மீன் எனப் பல வகைகளை ருசியாக செய்து சாப்பிடுவோம். இதில் செட்டிநாடு ஸ்பெஷல் என்றால் சொல்லவே வேண்டாம். சுவை அள்ளும். அந்தவகையில் சுவையான உப்புக்கறி மட்டன் வறுவல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத மட்டன் – 300 கிராம்
சின்ன வெங்காயம் – அரை கப்
பூண்டு – 20 பற்கள்
இஞ்சி – சிறிதளவு
வரமிளகாய் – 10
தக்காளி – 1
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மட்டன் நன்கு கழுவி எடுத்து, காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, இஞ்சி, பூண்டு, கொஞ்சம், வெங்காயம், 5 மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் அதில் மட்டன் கறி துண்டுகளை சேர்த்து, அதோடு, தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். மட்டனின் நிறம் சற்று மாற தொடங்கும்போது அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்றாக வேகவைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
பின்பு மற்றொரு அடுப்பில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீதமுள்ள வரமிளகாயை இரண்டாக உடைத்து சேர்த்து லேசாக வதக்கி, பின் எஞ்சிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும், வெங்காயம் நன்கு நிறம் மாறும்வரை வதக்க வேண்டும். பிறகு ஏற்கனவே வேகவைத்த மட்டனை இதில் சேர்க்கவும். தண்ணீர் சுண்டும் வரை வேக விடவும். அவ்வளவு தான், சுவையான செட்டிநாடு உப்புக் கறி வறுவல் தயார்.