சௌ சௌ காய் பிடிக்காது என்று சொல்பவர்கள் கூட, இந்த முறையில் குருமா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சட்டி குண்டா குழம்பு காலியாகும் அளவுக்கு சுவையாக இருக்கும் இந்த சௌ சௌ குருமா, இட்லி, சப்பாத்தி, தோசை, பரோட்டா போன்றவற்றுக்கு அருமையான காம்பினேஷன். இதை எப்படி செய்வது என்று மாம் ஆஃப் பாய்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் செய்துகாட்டியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
சௌ சௌ காய் - 1
வெங்காயம் - 2
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2
உப்பு
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 துண்டுகள்
முந்திரிப்பருப்பு - 5
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர், ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள இரண்டு தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
நறுக்கி வைத்துள்ள சௌ சௌ காயைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா, குழம்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குழம்பை கொதிக்க விடவும்.
இதற்கிடையில், தேங்காய், முந்திரிப்பருப்பு, சோம்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். குழம்பு நன்கு கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும். குருமா கெட்டியாகி, வாசனை வரும் போது, மல்லித்தழையை தூவி இறக்கினால், சுவையான சௌ சௌ குருமா தயார். இந்தக் குருமாவின் சுவை, இது சௌ சௌ காயில் செய்தது என்று யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அருமையாக இருக்கும்.
சௌ சௌ காய், பலரும் அதிகம் பயன்படுத்தாத காய்கறிகளில் ஒன்றாகும். ஆனால் இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. சிறுநீரகக் கல் முதல் இதய ஆரோக்கியம் வரை பல விஷயங்களில் சௌ சௌ காய் ஒரு சிறந்த உணவுத் தேர்வாகும்.
சௌ சௌ காயில் குறைந்த கலோரிகள், கார்போஹைடிரேட்டுகள் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளன. மேலும் இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.சௌ சௌ காயை கூட்டு, பொரியல், சாம்பார், குருமா போன்ற பல்வேறு உணவுகளில் சேர்த்து அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாகப் பெறலாம்.