சுவையான தேங்காய் ஜெல்லியை எப்படி எளிமையாக செய்வது என தற்போது காணலாம்.
இதற்கு தேவையான பொருள்கள்:
1 தேங்காய்,
1 லிட்டர் தண்ணீர்,
2 ஸ்பூன் கான்ஃபிளவர் மாவு,
ஏலக்காய்,
நெய் சிறிதளவு,
4 ஸ்பூன் சர்க்கரை
செய்முறை:
குக்கரில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு தேங்காயை வைத்து சுமார் 5 அல்லது 6 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். தேங்காயை அப்படியே குக்கரில் வேக வைப்பதால், வெடிக்கும் என்று அச்சம் கொள்ள தேவையில்லை.
இவ்வாறு தேங்காயை வேகவைத்து ஜெல்லி தயாரித்தால், சுமார் 2 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும். தேங்காய் வெந்ததும் அதனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். இதனிடையே, 2 ஸ்பூன் கான்ஃபிளவர் மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், வெட்டி எடுத்த தேங்காய் துண்டுகள், ஏலக்காய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். இதை நன்றாக அரைத்ததும், தேங்காய் பாலை வடிகட்டி எடுக்க வேண்டும். இந்த தேங்காய் பாலுடன், கலக்கி வைத்திருந்த கான்ஃபிளவர் மாவு, 4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
இந்தக் கலவையை அடுப்பில் வைத்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கலக்க வேண்டும். இப்போது, சிறிய கிண்ணங்கள் எடுத்து அவற்றில் ஒரு துளி நெய் விட்டு தேய்க்க வேண்டும். அடுப்பில் இருந்து எடுத்த தேங்காய் பால் கலவையை, இந்த கிண்ணங்களில் ஊற்றி வைக்க வேண்டும். இது ஆறிய பின்னர், ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
இப்படி செய்தால் சுவையான தேங்காய் ஜெல்லி தயாராகி விடும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.