காபி பிரியர்கள், அதனை தினமும் ஏன் குடிக்கிறோம் என பல காரணிகளை முன்வைப்பார்கள். அதேசமயம், காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கிற கூற்றையும் பரவலாக காண முடியும். ஆனால், தற்போது வெளியான முடிவு காபி பிரியர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.
காபியை சர்க்கரை சேர்த்து அல்லது சர்க்கரை இல்லாமல் குடிப்பவர்களுக்கு, எதிர்பாராமல் ஏற்படும் இறப்பு அபாயம் குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பிரிட்டிஷ் காபி சங்கத்தின் கூற்றுப்படி, இங்கிலாந்தில் தினமும் 98 மில்லியன் கப் காபி உட்கொள்ளப்படுகிறது. காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்று பல முந்தைய கண்டுபிடிப்புகள் உள்ளன. உண்மையில், மனரீதியாகவும், உடல் நலனிலும் பாசிட்டிவ் தாக்கத்தை தான் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.
தற்போது, சீன ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில், தினமும் சர்க்கரை சேர்த்தோ அல்லது சர்க்கரை இல்லாமலோ காபியை குடிப்பவர்களுக்கு, அதை குடிக்காதவர்களை விட ஏழு ஆண்டுகளில் இறப்பு அபாயம் குறைவாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இந்த ஆய்வு UK BioBank-ன் 1,71,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் தரவை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள், 2006 ஆம் ஆண்டு முதல் 5,00,000 க்கும் அதிகமான மக்களிடம் அவர்களது வாழ்க்கை முறை, ஆரோக்கியம், காபி குடிக்கும் பழக்கம் உட்பட பல தரவுகளை சேகரித்து வைத்துள்ளனர்.
ஆய்வுக் குழு, 2009 முதல் ஏழு ஆண்டுகளுக்கு பங்கேற்பாளர்களைக் கண்காணிக்க மக்களின் இறப்புச் சான்றிதழ்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தியது. அந்த காலக்கட்டத்தில் 3,177 பேர் உயிரிழந்தனர். வயது, பாலினம், இனம், கல்வி நிலை, புகைபிடிக்கும் நிலை, உடல் உழைப்பின் அளவு, உடல் நிறை, உணவு முறை போன்ற காரணிகளை வைத்து பரீசிலனை செய்துள்ளனர். அதில், காபி குடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது, சர்க்கரை சேர்க்காமல் காபி குடிப்பவர்களுக்கு இறப்பு ஆபத்து குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது
ஒரு நாளைக்கு 2.5 முதல் 4.5 கப் வரை காபி குடிப்பவர்களுக்கு, இறப்பு அபாயம் 29 சதவீதம் குறைவாக காணப்படுகிறது.
அதே சமயம், ஆய்வில் பங்கேற்பாளர்களிடம் காபி குடிப்பது மற்றும் பிற பழக்கங்கள் பற்றி ஒருமுறை மட்டுமே கேள்வி எழுப்பப்பட்டது. எனவே, காபியில் அதிக சர்க்கரை சேர்ப்பவர்களுக்கு என்ன பாதிப்பு இருக்கும் என்பது தெரியவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil