50 வகை இட்லி, விதவிதமான கீரை… கோவையில் சுண்டி இழுத்த உணவுத் திருவிழா!
Coimbatore district administration and Food Safety Department conducts food festival in Coimbatore Tamil News: கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து நவதானியங்களால் ஆன உணவு திருவிழா நடத்தினர். இதில் 50 வகையான இட்லிகள் இடம்பெற்றன.
Food festival in Coimbatore Tamil News: கோவை நவஇந்தியா அருகே உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் உகந்த உணவுத் திருவிழா என்ற தலைப்பில் நவதானியங்களால் ஆன வித்தியாசமான உணவுத் திருவிழா நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் நவதானியங்கள் கீரை வகைகள் போன்ற உடலுக்கு ஆரோக்கியமான உணவு பொருட்கள் இடம் பெற்றிருந்தன. இந்த வித்தியாசமான இயற்கையான உணவுப் பொருட்களை பார்வைக்கு வைப்பதன் மூலம் நவதானியங்களின் அவசியத்தை மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து வாழ்த்திய மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் உணவுத் திருவிழாவில் இடம் பெற்றிருந்த நவதானிய உணவுப் பொருட்களை உட்கொண்டனர். இந்த உணவுத் திருவிழாவில் கம்பு கேழ்வரகு ராகி மக்காச்சோளம் போன்ற பல வகையான தானியங்களால் ஆன இட்லி, தோசை, கேக், வடை போன்ற பல வகையான உணவுகள் இடம் பெற்றிருந்தன. இதேபோல் 50 வகையான இட்லிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இதில் குறிப்பாக முருங்கைக் கீரை இட்லி, வல்லாரை இட்லி ,அகத்திக்கீரை இட்லி, பப்பாளி இட்லி, ஓமம் இட்லி, கொய்யாப்பழம் இட்லி போன்றவை பார்வையாளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. இந்த உணவுத் திருவிழாவில் கேட்டரிங் டெக்னாலஜி மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி நலத்துறை பெண் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.