சளி, காய்ச்சல் போன்ற உடல்நலக் குறைபாடுகளின் போது, சூடாகவும், சத்தானதாகவும், அதே சமயம் எளிதில் ஜீரணமாகக்கூடிய ஒரு உணவை நாடும்போது, ரசம் சாதம் சிறந்த தேர்வாக அமையும். இது உடலுக்கு இதமளிப்பதுடன், சுவையிலும் சிறந்தது. இந்த எளிமையான செய்முறையைப் பின்பற்றி, வீட்டிலேயே சுவையான ரசம் சாதம் தயார் செய்வது எப்படி என்று சமையல் வித் ஷரோன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தனியா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - தோலுடன் 6 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - ஒரு சிட்டிகை
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தக்காளி - 2 (அரைக்க)
சாதம் தயாரிக்க:
நெய் - 2 டீஸ்பூன் (தாளிக்க)
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுந்து - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
பெருங்காயம்
உப்பு - 1 டீஸ்பூன்
அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - கால் கப்
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
கொத்தமல்லி
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில், அரைப்பதற்கான பொடிப் பொருட்களை (தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, மிளகு, சீரகம், வெந்தயம், கடலைப்பருப்பு) வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுக்கவும். ஆறியதும், இரண்டு தக்காளி சேர்த்து மைய அரைத்து தனியே வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் 2 டீஸ்பூன் நெய் விட்டு சூடாக்கவும். கடுகு, சீரகம், உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். தாளித்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்க்கவும். அத்துடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், பெருங்காயம், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
ஒரு மணி நேரம் ஊறவைத்த ஒரு கப் அரிசி மற்றும் கால் கப் துவரம்பருப்பை மசாலாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து, அதையும் சேர்க்கவும். மொத்தமாக ஐந்தரை கப் தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து குக்கரை மூடவும்.
குக்கரில் ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், சாதத்தை ஒருமுறை கிளறிவிட்டு, நிறைய நறுக்கிய கொத்தமல்லி மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பரிமாறவும். இந்த ரசம் சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.