இன்றைய சூழலில் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான சமையல் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. இதில் காண்பிக்கப்படும் பல ரெசிபிக்களை, நிறைய பேர் தங்கள் வீடுகளில் செய்து பார்க்கின்றனர்.
அந்த வகையில், சுட்ட கத்திரிக்காய் துவையலை எப்படி சுலபமாக செய்யலாம் என்று இதில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 2,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,
உளுந்து - 1 டேபிள் ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 3,
சின்ன வெங்காயம் - 4,
பூண்டு - 4,
புளி,
வெல்லம் - அரை டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
இரண்டு கத்திரிக்காய்களை அடுப்பில் வாட்டி நன்றாக சூடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு சூடுபடுத்திய கத்திரிக்காய்களை தண்ணீரில் போட்டு அவை ஆறியதும், மேற்புற தோலை நீக்க வேண்டும். இப்போது, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில், உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய்கள், சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவை சேர்த்து வறுக்க வேண்டும்.
இவ்வாறு வறுத்த பின்னர், இவை அனைத்தையும் உரலில் வைத்து தட்டி எடுத்துக் கொள்ளலாம். இப்போது, சுட்டு வைத்த கத்திரிக்காயையும் இதில் சேர்த்து இடிக்க வேண்டும். இந்த கத்திரிக்காய் மசாலாவை அடுப்பில் உள்ள கடாயில் போட்டு அத்துடன் புளி கரைசல், உப்பு சேர்த்து கலக்க வேண்டும்.
இறுதியாக, சிறிது வெல்லம் மற்றும் கொத்தமல்லி இலைகள் தூவி எடுத்தால் சுவையான சுட்ட கத்திரிக்காய் துவையல் தயாராகி விடும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, அதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.