சமையல் என்பது ஒரு கலை. அதை இன்னும் சுவையாக்கவும், அன்றாட சமையல் வேலைகளை எளிதாக்கவும், இங்கே சில அருமையான குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
டிப்ஸ் 1: பூரி மிருதுவாகவும், உப்பலாகவும் வர வேண்டும் என்றால், மாவு பிசையும்போது சிறிதளவு நெய்யும், மிதமான சூட்டில் உள்ள வெந்நீரையும் சேர்த்துப் பிசைந்து சுட்டெடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால், பூரி நன்கு உப்பி, மென்மையாகவும், சாப்பிட மிகவும் சுவையாகவும் இருக்கும்.
டிப்ஸ் 2: பொங்கல் நன்றாக மசிந்து, குழைந்து வர, அரிசி மற்றும் பருப்பு இரண்டையும் தலா ஒரு டம்ளர் எடுத்துக்கொண்டு, நான்கு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர், நெய், மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து பொங்கலுடன் சேர்த்துக் கலந்தாலே போதுமானது. பொங்கல் குழைவாக வர, நன்றாக வேகவைப்பதே முக்கியம்.
டிப்ஸ் 3: காய்கறி பிரட்டல் செய்யும் போது, உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால் கவலைப்பட வேண்டாம். மீண்டும் அதை அடுப்பில் வைத்து சூடாக்கி, ஒரு சிறிதளவு பச்சரிசி மாவைத் தூவி, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இறக்கினால், உப்பு காரம் குறைந்து, காய்கறி பிரட்டல் மிகவும் சுவையாக மாறும்.
டிப்ஸ் 4: இட்லி சாம்பார் கெட்டியாகிவிட்டால், வெறும் தண்ணீர் விடுவதற்குப் பதிலாக, உப்பு, மிளகு, சீரகத்தூள் ஆகியவற்றை வறுத்துப் பொடி செய்து, தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால், சாம்பாரின் வாசனையும், ருசியும் மாறாமல் அப்படியே இருக்கும்.
டிப்ஸ் 5: கோதுமை மாவை தோசைக்குக் கரைக்கும்போது, தோசை சுடுவதற்கு முன் மாவில் சிறிது எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை, மற்றும் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கலந்தால், கோதுமை தோசை மிகவும் அருமையான சுவையுடன் இருக்கும்.
டிப்ஸ் 6 : சைடு டிஷ்ஷாக வெள்ளை நிற கிரேவி தயாரிக்க விரும்பினால், முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றை மசாலாவுடன் சேர்த்து அரைத்து, கிரீமுடன் கலந்து கிரேவி செய்தால், கிரேவி அழகான வெள்ளை நிறத்தில் கிடைக்கும். இது பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும்.
டிப்ஸ் 7: எண்ணெய் உபயோகிக்கும் பாத்திரங்கள் மற்றும் தோசைக்கல் போன்றவற்றில் எண்ணெய் பிசுக்கு காணப்பட்டால், அதை அகற்ற ஒரு எளிய வழி உள்ளது. பாத்திரங்கள் சூடாக இருக்கும்போதே, சிறிது மோர் விட்டு தேய்த்து, பின்னர் தேங்காய் நாரினால் அழுத்தி தேய்த்துக் கழுவினால், எண்ணெய் பிசுக்கு சுத்தமாக நீங்கிவிடும்.
டிப்ஸ் 8: உளுந்து மாவு அரைக்கும்போது, ஐஸ் வாட்டர் அல்லது மண்பானையில் வைக்கப்பட்ட ஜில்லென்ற தண்ணீரை ஊற்றி அரைத்தால், மாவு நிறைய கிடைக்கும். இதனால் இட்லியும் தோசையும் மிருதுவாகவும், பஞ்சு போலவும் இருக்கும்.
டிப்சஸ் 9: தேங்காய் துருவலில் நன்கு சூடான வெந்நீரை விட்டு, சிறிது நேரம் கழித்து பிழிந்தால், அதிக அளவு பால் கிடைக்கும். இதனால் மீண்டும் பால் எடுக்க வேண்டிய தேவை இருக்காது, நேரமும் மிச்சமாகும்.