சமையல் அனைவரும் செய்து விடலாம். ஆனால் ஒரு சில டிப்ஸ்களை செய்து சமையலை ஈஸியாக்குவது கொஞ்சம் கடினம் தான். ஆனால் இந்த ஒரு சில டிப்ஸ்களை ட்ரை பண்ணுங்கள்.
- இட்லி அல்லது வடைக்கு உளுத்தம் பருப்பு அரைக்கும் போது உளுத்தம் பருப்பை ஒரு டப்பாவில் ஊறப்போட்டு, உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு பின்னர் மாவு அரைக்கும்போது எடுத்து அரைக்கலாம். இப்படிச் செய்வதால் இட்லி பூப்போலவும், வடை எண்ணெய் குடிக்காமல் மெத்தென்றும் வரும்.
- ஊறுகாயிலுள்ள காய்கள் தீர்ந்து வெறும் விழுது மட்டும் இருந்தால் ஒரு பாத்திரத்தில் ஐந்து சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு, அதில் இரண்டு மூன்று ஸ்பூன் ஊறுகாய் விழுதைக் கலந்துவிடுங்கள். தயிர் சாதத்துக்கும், சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள சூப்பர் சைட் டிஷ் தயார்.
- வெங்காய ராய்த்தா தயாரிக்கும்போது, இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல், ஒரு பச்சை மிளகாய் ஆகியவற்றை அரை ஸ்பூன் மைதா மாவு சேர்த்து அரைத்து, பச்சடியில் கலந்துவிட்டால், ராய்த்தா கெட்டியாகத் தனிச்சுவையுடன் இருக்கும்.
- சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து பிசறி வைத்தால், தயிர்சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள சுவையான ஊறுகாய் தயாராகிவிடும்.
- புளி பழையதாகி இருந்தால், அதைச் சேர்க்கும் குழம்பு, சாம்பார் போன்றவையும் கருப்பாக பழைய வாசனையுடன் இருக்கும். இதைத் தவிர்க்க, சாம்பார் தயாரித்து முடித்து, அடுப்பை அணைத்ததும், சாம்பாரில் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கலந்துவிட்டால், புளியினால் ஏற்பட்ட நிறம் மாறி சாம்பார் நல்ல மணத்துடன் இருக்கும்.
- தேங்காய் கொப்பரை தேவைப்பட்டால், சாதாரணமாக இருக்கும் தேங்காயை உடைத்து, வில்லைகளாகப் பிரித்து, ஃப்ரிட்ஜில் ஒரு தட்டில் அப்படியே வைத்துவிடுங்கள். ஐந்து நாட்களில் அது கொப்பரையாக மாறியிருக்கும்.
- பாலை உறை ஊற்றுவதற்கு அது நன்கு ஆற வேண்டும் என்பதில்லை. காய்ச்சிய சில நிமிடங்கள் கழித்து, சூடாக இருக்கும்போதே சில துளி மோரை ஊற்றி, நுரை வரும் அளவுக்கு ஆற்றிவிட்டால், தயிர் விரைவாகவும், கெட்டியாகவும் உறைந்துவிடும்.
- சப்பாத்திகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கும்போது, அடியில் உள்ள சப்பாத்தி ஆவியினால் சோர்ந்துவிடும். இதைத் தவிர்க்க, துளையுள்ள தட்டில் சப்பாத்திகளை அடுக்கினால், அடியில் உள்ள சப்பாத்தியும் புதிதாகவே இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.