கறிச்சோறு சுவையிலும் மணத்திலும் ஒரு தக்காளி சோறு எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பிரியாணி குருணை
தக்காளி
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
புதினா இலைகள்
கொத்தமல்லி தழை
இஞ்சி பூண்டு விழுது
பிரியாணி மசாலா
மிளகாய் தூள்
முழு கரம் மசாலா
பெருஞ்சீரகம்
உப்பு
கடலை எண்ணெய்
ஒரு கடாயில் கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். ஒரு இரண்டு நிமிடம் வதக்கி பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்க வேண்டும். பின்னர் நறுக்கிய பச்சை மிளகாயை காலத்திற்கு தகுந்தவாறு போட வேண்டும். பின்னர் இதில் புதினா, கொத்தமல்லி தழைகளை போட்டு அதனை வதக்கி அதனுடன் மிக்ஸியில் அரைத்து தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் மசாலா பொருட்களும் நன்கு வதங்க வேண்டும். குறிப்பாக தக்காளியை நன்கு மைய மிக்ஸியில் அரைத்து விட வேண்டும் அப்படியே போட்டால் முழுசாக இருக்கும் குழந்தைகள் சாப்பிட விரும்ப மாட்டார்கள். இப்படி அரைத்து சேர்ப்பதால் தக்காளி சாப்பாட்டுடன் கலந்து நன்கு மிக்ஸ் ஆகிவிடும்.
தக்காளி நன்கு வதங்கி தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பதத்திற்கு ஆக வேண்டும். இதில் சிறிது மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பிரியாணி மசாலா தேவையான அளவு சேர்த்து கலந்து விட வேண்டும்.
இதில் காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படி காய்கறிகளை சேர்க்கும்போது தக்காளியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். சுவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
பின்னர் இதை தம் போடுவதற்காக வேறொரு பாத்திரத்தில் மாற்றி தேவையான அளவு தண்ணீர் அளந்து ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஊற வைத்த அரிசியை நன்கு கழுவி சேர்க்க வேண்டும்.
தண்ணீர் வற்றி அரிசி பாதி வெந்த பிறகு 10 முதல் 15 நிமிடம் தம் போட வேண்டும். தம் போடுவதற்கு முன் சாப்பாட்டின் மீது ஒரு சிறிய வாழை இலையை வைத்து தம் போட்டால் நன்கு வாசனையாக சாப்பாடு ரெடி ஆகிவிடும். இதற்கு தயிர் பச்சடி, முட்டை கிரேவி, சட்னி போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“