காலிஃபிளவர் 65 ஒரு பிரபலமான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டி. இதை வீட்டிலேயே எளிதாகவும், மிருதுவாகவும், மொறுமொறுப்பாகவும் எப்படி செய்வது என்று பாய்ஸாஃப் மாம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
காலிஃபிளவர் பூக்களை வெந்நீரில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்கவும். இது பூச்சிகள் மற்றும் அழுக்குகளை நீக்க உதவும். பிறகு தண்ணீரை வடித்துவிடவும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து கெட்டியான, கட்டி இல்லாத மாவு கலவையைத் தயார் செய்யவும். மாவு மிகவும் நீர்த்துப் போகாமல் இருக்க கவனமாக இருக்கவும். மாவு காலிஃபிளவரில் ஒட்டிக்கொள்ளும் பதம் இருக்க வேண்டும்.
சுத்தம் செய்த காலிஃபிளவர் பூக்களை மாவு கலவையில் சேர்த்து, எல்லாப் பக்கங்களிலும் நன்கு படுமாறு கிளறவும். சுமார் 15-20 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். இது மசாலா காலிஃபிளவரில் நன்கு சேர உதவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், காலிஃபிளவர் பூக்களை ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்க்கவும். அதிகமாகப் போடாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு பொரிப்பது நல்லது.
காலிஃபிளவர் பொன்னிறமாக மாறி, மொறுமொறுப்பாகும் வரை பொரிக்கவும். தேவைப்பட்டால், கறிவேப்பிலையைச் சேர்த்து பொரித்து எடுக்கலாம். பொரித்த காலிஃபிளவரை டிஷ்யூ பேப்பர் உள்ள தட்டில் வைக்கவும், அதிகப்படியான எண்ணெய் உறிஞ்சப்படும். மாவு கலவையில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவை கூடும்.