திடீரென பசி எடுக்கும்போது அல்லது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, உடனடியாக நினைவுக்கு வருவது அப்பளம்தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட உகந்ததும் அப்பளம் தான். அப்பளத்தை புதியதாகத் தயாரித்த மசாலாப் பொருட்களுடன் சேர்த்து உண்டால், இன்னும் சுவையாக இருக்கும். வெறும் அப்பளம் சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் மசாலா அப்பளம் சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். இனி ஸ்நாக்ஸ் டைமில் இப்படி ட்ரை பண்ணுங்கள்.
தேவையான பொருட்கள்:
அப்பளம்
வெங்காயம்
தக்காளி
கொத்தமல்லி இலை
பச்சை மிளகாய்
மிளகாய் தூள்
சாட் மசாலா
பிளாக் சால்ட்
எலுமிச்சை சாறு
எண்ணெய்
செய்முறை:
முதலில், ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அப்பளத்தை லேசாகச் சூடு செய்து எடுக்கலாம். அல்லது நேரடியாகத் தீயில் காட்டி சுடலாம். அல்லது, ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றிப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கலாம். எந்த முறையில் செய்தாலும், அப்பளம் நன்கு மொறுமொறுப்பாக இருக்க வேண்டும்.
இப்போது ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
அடுத்ததாக மிளகாய் தூள், சாட் மசாலா, பிளாக் சால்ட் ஆகியவற்றைச் சேர்க்கவும். கடைசியாக எலுமிச்சை சாறு ஊற்றி, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக நன்கு கலந்துவிடவும்.
மசாலா எல்லாக் காய்கறிகளிலும் சீராகக் கலந்து இருக்க வேண்டும். சாப்பிடுவதற்குச் சரியாக ஒரு நிமிடத்திற்கு முன்பு இந்த மசாலாவை அப்பளத்தின் மேல் வைக்க வேண்டும். ஒரு தட்டில் மொறுமொறுப்பான அப்பளங்களை அடுக்கி அதன் மேல், நாம் கலந்து வைத்துள்ள புதிய மசாலா கலவையை ஒரு ஸ்பூன் எடுத்து பரவலாக சேர்க்கவும்.
இப்போது மொறுமொறுப்பான, புத்துணர்ச்சியூட்டும், காரசாரமான மசாலா பப்பட் தயார். இந்த மசாலா பப்பட்டைத் தயாரித்தவுடன், உடனடியாக சூடாகப் பரிமாறி உண்ண வேண்டும். அப்பளம் ஊறிவிடாமல், அதன் மொறுமொறுப்பு குறையாமல் சாப்பிட்டால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும்.