வெள்ளரிக் காய் உடல் நலத்திற்கு நல்லது. குறிப்பாக கோடையில் அதிகம் உள்கொள்ள வேண்டும். இதில் நீர்ச் சத்து அதிகம் உள்ளது. உடல் சூட்டை தணிக்கும். செரிமானத்தை தூண்டும். சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளது. இவ்வளவு சத்து நிறைந்த வெள்ளரிக் காய்யில் சட்னி செய்வது குறித்து பார்க்கலாம். இட்லி, தோசைக்கு உடன் வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 2
கடலை பருப்பு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
புளி – சிறிதளவு
தேங்காய் – 1 கப்
வெல்லம் – 1 ஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதில் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைக்கவும். தேங்காய் துருவி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், கடலை பருப்பு, புளி, தேங்காய் துருவல், வெல்லம் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தாக தாளிக்க வேண்டும். அதற்கு, அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் கோடைக்கு குளிர்சியான வெள்ளரிக் காய் சட்னி தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“