வெள்ளரிக்காய் உடல் நலத்திற்கு நல்லது. வெள்ளரியை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் போட்டும் கூட குடிக்கலாம். வெள்ளரிக்காய் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும். குறைந்த விலையில் வாங்கலாம். அந்தவகையில் வெள்ளரிக்காயில் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தக்காளி - 2
பூண்டு - 4
துவரம் பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 1
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
கடுகு - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
வெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1ஸ்பூன்
புளிச்சாறு - சிறிது
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, பச்சை மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்த பிறகு, அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தண்ணீர் கொஞ்சம் ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும். வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு தயார்.