கறிவேப்பிலை பல நன்மைகளை கொண்டுள்ளது. கண், ரத்தம், தோலுக்கு நல்லது. கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுவதன் மூலம் தோல் சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. அந்த வகையில் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரைக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டீஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - 1 கப்
குழம்புக்கு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
பூண்டுப் பல் - 4
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றி புளி கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து வறுத்து ஆற வைக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும்.
இப்போது அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும். அடுத்து வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு இறக்கவும். இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி. சுடு சோற்றில் போட்டு சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.