சர்க்கரை நோய் பிரச்சனைக்கு பாகற்காய் போன்ற கசப்பான உணவுகள் சாப்பிடுவது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர். பாகற்காய் என்றாலே பலர் சாப்பிட மறுப்போம். காரணம் அதில் உள்ள கசப்புத்தன்மை, நாவிற்கு சுவையாக இருக்காது என சாப்பிட மாட்டோம். குறிப்பாக குழந்தைகள் இதை சாப்பிட மறுப்பர். ஆனால் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பருமனான குழந்தைகளிடையே எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பாகற்காய்யில் நீர்ச்சத்து, வைட்டமின் கே, லைகோபீன் மற்றும் பைட்டோகெமிக்கல்ஸ் இருப்பதால் பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது என பெங்களூருவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் கூறினார்.
பாகற்காய் தொடர்ந்து உட்கொண்டு வருவது ஆரோக்கியமானது. வழக்கமான பாகற்காய் ரெசிபியை விட சுவையாக செய்து சாப்பிட சில ரெசிபிகளை இங்கு பார்க்கலாம்.
1. பாகற்காய் கட்லெட்
பாகற்காய் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்
பாகற்காய் – 2
துருவிய கேரட் – 1/2 கப்
வேகவைத்த மற்றும் தோல் நீக்கிய உருளைக்கிழங்கு – 2
வேகவைத்த பச்சை பட்டாணி – 2 டீஸ்பூன்
கோதுமை பிரெட் துண்டு – 2
தேவைக்கேற்ப உப்பு
ஆம்சூர் பொடி – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன்
நறுக்கிய புதினா இலைகள் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
பாகற்காயைக் கழுவி இரண்டாக நறுக்கி, அதிலிருந்து விதைகளை அகற்றவும். பின் பாகற்காய்யை வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பாகற்காய்யில் உப்பு சேர்ந்து கலந்து 5 நிமிடம் தனியாக வைக்கவும். இதற்கிடையில் துருவிய கேரட் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
5 நிமிடங்களுக்குப் பிறகு, பாகற்காய் பாத்திரத்திலிருந்து தண்ணீரை நீக்கி, துருவிய கேரட் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும். பச்சை பட்டாணி சேர்த்து கொத்தமல்லி தூள், ஆம்சூர் தூள், சிவப்பு மிளகாய் தூள், உப்பு கொஞ்சம் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து, நறுக்கிய கொத்தமல்லி இலைகள், கோதுமை பிரெட் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். கட்லெட் கலவையிலிருந்து உருண்டைகளை உருவாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கட்லெட் உருண்டையை தட்டையாக்கி மிதமான சூட்டில் எண்ணெய்யில் போட்டு எடுக்கவும். ஆரோக்கியமான மற்றும் சத்தான பாகற்காய் கட்லெட் தயார். சட்னியுடன் சேர்த்து பரிமாறலாம்.
இனிப்பான பாகற்காய் ரெசிபி
2 பாகற்காய்
2 பச்சை ஆப்பிள்</p>
1 வெள்ளரி
1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
4 ஐஸ் கட்டிகள்
உப்பு
செய்முறை
பாகற்காய் தோல் உரித்து, உள்ளிருக்கும் வெள்ளை பகுதியை கரண்டி கொண்டு அகற்றவும். சிறிதாக நறுக்கவும்.
சிறிதாக நறுக்கிய பாகற்காய் துண்டை ஒரு பாத்திரத்தில் உப்பு, எலுமிச்சை சாறு ஊற்றி சில நிமிடங்கள் ஊற வைக்கவும்.
பின் அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர், ஆப்பிள், வெள்ளரி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். பின் வடிகட்டி ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.
ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பாகற்காய் பச்சை ஆப்பிள் டிலைட் தயார்.
3. பாகற்காய் செலரி சூப்
பாகற்காய் -3
வெங்காயம் – 2
தக்காளி – 2
செலரி – 1
கடலை பருப்பு – 25 கிராம்
மிளகு தூள் – 2 டீஸ்பூன்
தேவைக்கேற்ப கல் உப்பு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
தேவைக்கேற்ப தண்ணீர்
கொத்துமல்லி இலை
செய்முறை
பாகற்காய், வெங்காயம், தக்காளியை நறுக்கி கடலை பருப்புடன் சேர்த்து பொடியாக அரைக்கவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பாகற்காய், தக்காளி, செலரி, வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, காய்கறிகளை நன்கு வதக்கி ஆறவைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
பின் அதை வடிகட்டி, சூப்பில் சிறிது கல் உப்பு, மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லி இலைகளை சேர்த்து குடிக்கவும். சுவையான பாகற்காய் சூடான சூப் ரெடி.