நம்முடைய வீடுகளில் இரவு என்ன உணவு தயார் செய்யலாம் என நாம் அவ்வப்போது குழம்பிய மன நிலையில் இருப்போம். காலை சாப்பிடக் கூடிய பூரியை இரவு நேரத்தில் ஏன் சாப்பிட வேண்டும் எனவும் நினைத்து இருப்போம். அதேநேரம், சப்பாத்தி சாப்பிட நமக்கு விருப்பம் இருக்காது. இவற்றுக்கு மாற்றாக, ஆனால், இவை செய்யக் கூடிய ஸ்டைலில் சூப்பரான டின்னர் எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 7 பற்கள்
பச்சை மிளகாய் - 2
தேங்காய் துருவல் - சிறிதளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 2 கப் ( வறுத்தது)
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை:
முதலில் ஒரு மிக்சி எடுத்து, அதில் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்காமல் நொறுநொறுப்பாக அரைக்கவும். இதன்பிறகு, மிக்சியை கழுவி அதில் தேங்காய் துருவல் மற்றும் சீரகம் சேர்த்து நொறுநொறுப்பாக அரைக்கவும்.
தொடர்ந்து, ஒரு கடாய் எடுத்து எண்ணெய் விட்டு சூடேற்றவும். பிறகு ஏற்கனவே மிக்சியில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் கலவையை முதலில் சேர்த்து வதக்கவும். பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
பின்னர் அவற்றில் 3 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, அடுப்பை முழுவதுமாக குறைத்து வைத்த பிறகு, வறுத்து எடுத்த அரிசி மாவை அவற்றுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இந்த மாவு சப்பாத்தி மாவு அளவுக்கு வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும். பிறகு, சப்பாத்திக்கு உருண்டை பிடிப்பது போல் மாவை உருட்டி எடுத்து கொள்ளவும். தேவைப்பட்டால் மாவுடன் எள் சேர்த்துக் கொள்ளலாம்.
பின்னர் உருண்டையாக பிடித்த மாவை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் கட்டையில் வைத்து தேய்க்கவும். பின்னர் அவற்றை வட்டமாக டம்ளர் அச்சு வைத்து வெட்டிக் கொள்ளவும். இப்படியாக மீதமுள்ள மாவில் வட்ட வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் வைத்து நன்கு காய்ந்த பிறகு பூரியை பொரித்து எடுப்பது போல் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு எடுத்துக் கொள்ளவும். மாவு சிவக்க எண்ணெயில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
அடுத்ததாக இவற்றுக்கு ஏற்ற தக்காளி சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 ஸ்பூன்
பூண்டு - 10 பற்கள்
தக்காளி பழம் - 6
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை - பொடியாக நறுக்கியது
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியது:
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் பூண்டு சேர்க்கவும். பிறகு, பழமான தக்காளியை எடுத்து அவற்றை இரண்டாக வெற்றி அப்படியே போட்டு வேக வைக்கவும்.
இப்போது அடுப்பு தீயை மீடியமாக வைத்து விட்டு, உப்பு சேர்த்து 2, 3 நிமிடங்களுக்கு மூடி விட்டு தக்காளியை வேக வைக்கவும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு தக்காளியின் மீது இருக்கும் தோலை நீக்கவும்.
தக்காளி தோலை நீக்கியதும், பருப்பு கடையும் கட்டை அல்லது கரண்டி எடுத்து அதனை நன்கு மசிந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பை சூடேற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்க்கவும். அவற்றை நன்கு கலந்து விட்ட பிறகு, மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்க்கவும். இவற்றையும் நன்கு கலந்து விட்ட பின்னர், அவற்றை அப்படியே கொதிக்க வைத்து சுண்ட விடவும். கீழே இறக்கும் முன் கரம் மசாலா சேர்த்து இறக்கலாம். இதனை சேர்ப்பது உங்கள் விருப்பம் தான்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த வித்தியாசமான மற்றும் சுவையான சட்னி தயார். அவற்றை முன்னர் செய்து வைத்துள்ள பூரி போன்ற உணவுடன் சேர்த்து ருசித்து மகிழலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.