மாம்பழம் என்ற வார்த்தை ஒன்றுதான் வெயில்காலத்தின் நிம்மதி என்றே கூறலாம். இந்தியாவில் கிட்டதட்ட 1, 500 வகை மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் உலக மாம்பழங்கள் உற்பத்தியின் 50 % இந்தியாவில் நடைபெறுகிறது. சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மாம்பழங்கள் உற்கொள்ளப்பட்டு வருவதாக வரலாற்று தகவல் கூறுகிறது.
எப்படி இருப்பினும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி மருத்துவர்களிடம் கேட்கும் கேள்விகளில் இதுதான் முதல் இடத்தை பிடிக்கும். ‘சார் எனக்கு சுகர் இருக்கு. மாம்பழம் சாப்பிடலாமா? ’ என்ற கேள்வியை முன்வைக்காத சர்க்கரை நோயாளிகள் கிடையாது.
இணையதளத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? வேண்டாமா ? என்று நாம் தேடினால் பல ஆயிரம் கருத்துக்கள் இருக்கிறது. சில வீடியோக்கள் மாம்பழத்தில் இயற்கையான இனிப்பு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம் என்று கூறுகிறது. சில வீடியோக்கள் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்டால், சுகர் அளவு அதிகரிக்காது என்று கூறுகிறது. சில வீடியோக்கள் சுகர் நோயாளிகள் மாம்பழங்களை எடுத்துக்கொள்ள கூடவே கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் உண்மை இரண்டுக்கும் மத்தியில் இருக்கிறது.உங்களது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் மாம்பழங்களை சாப்பிடலாம். உங்கள் எச்.பி.ஏ.1.சி அளவு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக கார்போஹைட்ரேட் நிறைய எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது.
மாம்பழங்களில் உள்ள சத்துக்கள் என்ன ?
165 கிராம் நறுக்கிய மாம்பழங்களில், 99 கலோரிகள் உள்ளன, புரோட்டீன் சத்து – 0.8 முதல் 1 கிராம் வரை உள்ளது. கொழுப்பு சத்து: 0.63 கிராம் உள்ளது, கார்போஹைட்ரேட் : 24.8 கிராம், நார்சத்து: 2.64 கிராம், பொட்டாஷியம் ; 277 மில்லி கிராம் உள்ளது.
வைட்டமின் சி: 60.1 மில்லி கிராம், வைட்டமின் ஏ: 89.1 மைக்கிரோ கிராம், பீட்டா கெரோட்டீன் : 1,060 மில்லிகிராம், சியசாந்தன் மற்றும் லூடன் (Lutein and Zeaxanthin) : 38 மில்லி கிராம் உள்ளது. போலேட் ( Folate) : 71 மில்லி கிராம் உள்ளது
மேலும் மாம்பழங்களில் மெக்னீசியம், காப்பர், ஓமேகா 3 பேட்டி ஆசிட் மற்றும் ஒமேகா 6 பேட்டி ஆசிட் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை மாம்பழங்களை சாப்பிடலாம் ?
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் முதல் 200 கிராம் வரை கார்போஹைட்ரேட் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் 30 கிராம் கார்போஹைட்ரேட் பழங்களில் இருந்து எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் 100 கிராம் மாம்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. ஒரு சிறிய மாம்பழத்தை எடுத்துக்கொள்ளலாம்.
இந்நிலையில் மாங்காயின் கிளைசிமிக் இண்டக்ஸ் 50 முதல் 55 அளவில் இருக்கிறது. இதனால் மாம்பழங்கள் சாப்பிட்டால், நமது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். மைதாமாவில் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை வேகமாக அதிகரிக்கும், அந்த அளவுக்கு வேகமாக மாம்பழங்கள் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அதிகரிக்காது.
இதனால் ஒரு மாம்பழத்தில் பாதி சாப்பிடுவதே சரியான முடிவாக இருக்கும். ஒரு முழு மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் மற்ற பழங்களை எடுத்துக்கொள்ள கூடாது.
மாம்பழம் சாப்பிட சரியான நேரம் ?
நன்றாக உணவு சாப்பிட்ட பின் மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் இடையில் மாம்பழம் சாப்பிட வேண்டும். அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் இடையில் சாப்பிட வேண்டும்.