/indian-express-tamil/media/media_files/2025/06/23/jeyaruba-tips-2025-06-23-15-36-30.jpg)
பாதங்கள் உலர்ந்து வெடிப்பதற்கும் (பித்த வெடிப்பு) கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து மருத்துவர் ஜெயரூபா தெரிவித்துள்ளார். இது தொடர்பான பல தகவல்களை புதுயுகம் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில், கல்லீரல் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த விளக்கத்தை இதில் காணலாம்.
உணவு செரிமானத்தில் கல்லீரலின் பங்கு: கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்கிறது. இது உணவில் உள்ள கொழுப்புகளை ஜீரணிக்க உதவுகிறது. கொழுப்பு சரியாக ஜீரணமாகும்போதுதான், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (A, D, E, K) உடலால் உறிந்து கொள்ளப்படும். இந்த வைட்டமின்கள் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. இந்த வைட்டமின்கள் குறைபாடு ஏற்படும்போது, சருமம் வறண்டு போகும். குறிப்பாக பாதங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
நச்சுக்களை வெளியேற்றுதல்: கல்லீரலின் முக்கிய வேலை நச்சுகளை வெளியேற்றுவது. கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால், நச்சுகள் உடலில் தேங்கும். இதனால் சருமம் வறண்டு போய் அரிப்பு ஏற்பட்டு ஒவ்வாமை உண்டாகும்.
இரத்த ஓட்டம்: கல்லீரல் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கவும், இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவுகிறது. கல்லீரலில் பிரச்சனை இருந்தால், குறிப்பாக பாதங்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் செல்களின் மீளுருவாக்கம் தடைபடும். பாதங்களும் வறண்டு போகும்.
புரத உற்பத்தி: கல்லீரல், கொலாஜன் உட்பட புரத உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. கொலாஜன் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், செல்கள் புதுப்பிக்கவும் உதவுகிறது. புரத அளவு குறையும்போது, சருமம் வறண்டு போகும்.
கல்லீரல் 80% பாதிப்படையும் வரை எந்த அறிகுறியும் தெரியாது. ஆனால், சில ஆரம்ப அறிகுறிகள் மூலம் கல்லீரல் பாதிப்படைவதை கண்டுபிடிக்கலாம்.
பாதங்கள் உலர்ந்து போவது, மற்ற இடங்களில் சருமம் வறண்டு போவது, தொடர்ந்து ஒவ்வாமை ஏற்படுவது, காலையில் சோர்வாக உணருவது, வயிறு பெரிதாக இருப்பது மற்றும் தூக்கத்தில் பிரச்சனை ஏற்படுவது போன்றவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கல்லீரலை எப்படி பாதுகாப்பது?
அதிக கலோரி உணவுகள், கேக் மற்றும் பிஸ்கட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.
இரவு நேரங்களில் பிரியாணி போன்ற அதிக உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நன்றாக தூங்கவும்.
கீரை, நெல்லிக்காய், அவகோடா, நட்ஸ் மற்றும் விதைகள் போன்ற கல்லீரலை பாதுகாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
பாதம் உலர்ந்து வெடிப்பது சாதாரண பிரச்சனை என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். இது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். எனவே, பாதங்கள் உலர்ந்து வெடிக்கும் பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது என ஜெயரூபா அறிவுறுத்துகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.