நாம் பாரம்பரியமாக பயன்படுத்தும் அரிசி வகைகளில் சீரக சம்பாவும் ஒன்று. இதன் மருத்துவ பயன்கள் மற்றும் இவை உடலுக்கு எந்த விதத்தில் பலனளிக்கிறது என்பது குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளிக்கிறார்.
சாதாரண வெள்ளை அரிசிக்கு மாற்றாக இந்த சீரக சம்பா அரிசியை தினசரி உணவாக எடுத்துக் கொள்ளலாம். சீரக சம்பா அரிசியில் செலினியம் என்று சொல்லக் கூடிய முக்கியமான ஊட்டச்சத்து இருக்கிறது. மேலும், ஏராளமான அன்டி ஆக்சிடென்ட்ஸும் இதில் காணப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடிய பாதிப்பை குறைக்க முடியும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
இது நம் உடலில் இருக்கும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறைத்து விடுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படக் கூடிய மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயை இவை தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சீரக சம்பாவில் நார்ச்சத்து இருக்கிறது. இவை நம் செரிமான மண்டலம் சீராக இயங்க வழிவகுக்கிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீரக சம்பா அரிசி உதவி செய்கிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரிக்கும் போது அவை இரத்த குழாய்களில் படிந்து மாரடைப்பை உருவாக்கக் கூடும். இந்த கெட்ட கொழுப்பை அதிகரிக்க விடாமல், இவற்றை சீரான அளவில் பராமரிக்க சீரக சம்பா அரிசி பயன்படுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயமும் தடுக்கப்படுகிறது. மேலும், மூளை சீராக இயங்குவதற்கு சீரக சம்பா பயன்படுகிறது என மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.