சோர்வு நீங்கி கில்லி மாதிரி வேலை செய்யலாம்… இந்த துவையல் போதும்; டாக்டர் நித்யா
உடல் சோர்வை குறைப்பதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, சில உணவு முறைகளையும் அவர் பரிந்துரைத்துள்ளார். அவற்றை விரிவாக பார்க்கலாம்.
சிறிது தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தாலே உடல் சோர்வாகி விடுவதாக பலர் கூறுவதை கேட்டிருப்போம். இது மட்டுமின்றி தங்கள் அன்றாட வேலையை செய்வதற்குள் சிலர் சோர்வடைந்து விடுகின்றனர். உடலில் இருக்கும் நச்சுக்களை உணவு மூலம் அகற்றாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
அந்த வகையில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார். உடல் எடையை குறைக்க கொள்ளு பயன்படுவதாக பலரும் கருதுகின்றனர். ஆனால், உடலில் இருக்கும் நச்சுகளை நீக்கி, பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கவும் கொள்ளு பயன்படுகிறது.
இது தவிர கொள்ளை துவையலாக வைத்து சாப்பிடலாம். மேலும், பிரண்டை, முடக்கத்தான் போன்ற மூலிகைகளை துவையலாக வைத்து சாப்பிடும் போது நம் நரம்பு மண்டலம் வலுவடையும். இவை அனைத்தையும் அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதேபோல், சளி பிடித்திருந்தால் சிற்றரத்தை, பேரரத்தை மற்றும் திப்பிலி ஆகியவற்றை சேர்த்து குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இந்த குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சளி பிரச்சனை குணமடையும்.
Advertisment
Advertisements
முன்னர் இருந்த காலத்தில் இது போன்ற உணவுகளை பொதுமக்கள் அதிகமாக எடுத்துக் கொண்டனர். ஆனால், தற்போது இவற்றை பயன்படுத்தாததால் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றாட உணவில் வால்மிளகு சேர்க்கும் போது அவை நரம்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடல் சோர்வை தடுக்கிறது. அதன்படி, வால்மிளகை சற்று வறுத்து பொடியாக்கி ஒரு பாட்டிலில் அடைத்துக் கொள்ளலாம். இதனை ரசம் அல்லது மற்ற குழம்பு வைக்கும் போது அரை ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளலாம்.
இது போன்ற உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.