உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் ஐந்து முக்கிய உணவு வகைகளை பற்றியும் குறிப்பாக உதவும் மீன்களை பற்றி டாக்டர் பிள்ளை தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற தீவிர உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்த, மருந்துகளை விட உணவுமுறை மாற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று டாக்டர். பிள்ளை வலியுறுத்துகிறார்.
Advertisment
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: நார்ச்சத்து செரிமான மண்டலத்தில் கெட்ட கொழுப்பை உறிஞ்சுவதைத் தடுத்து, அதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. ஓட்ஸ், முழு தானியங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட் பருப்புகள் போன்ற கொட்டைகள் மற்றும் விதைகள், பீன்ஸ், ஆப்பிள், பேரிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவை இதில் அடங்கும்.
நல்ல கொழுப்பு (HDL) நிறைந்த உணவுகள்: நல்ல கொழுப்பை உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பாதாம், அக்ரூட் பருப்புகள், வெண்ணெய் பழங்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் செக்கு தேங்காய் எண்ணெய் ஆகியவை நல்ல கொழுப்புக்கான ஆதாரங்கள்.
மீன் வகைகள்: மேலும், நெய்மீன், சுரை, நெத்திலி, அயிலா, சலா போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் நல்ல கொழுப்பிற்கு பங்களிக்கின்றன.
Advertisment
Advertisements
சோயா புரதம்: சோயா பால் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற சோயா பொருட்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க உதவும்.
பூண்டு: பூண்டு இரத்தத்தைச் சுத்திகரித்து, கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இதை சமையலில் சேர்க்கலாம் அல்லது வறுத்து சாப்பிடலாம், ஆனால் அமிலத்தன்மை காரணமாக பச்சையாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
பச்சைத் தேநீர்: இயற்கையான பச்சைத் தேயிலையில் உள்ள கேட்டசின்கள் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள், கெட்ட கொழுப்பைக் கணிசமாகக் குறைத்து, இருதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. பாக்கெட் தேநீரைத் தவிர்த்து, உலர்ந்த பச்சைத் தேயிலையைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
கூடுதலாக, தாவர ஸ்டெரால்கள் மற்றும் ஸ்டானோல்கள் (ஆரஞ்சு ஜூஸ், தயிர், கொட்டைகள் மற்றும் விதைகள், பழங்கள், காய்கறிகளில் காணப்படுபவை) குடலில் கொழுப்பு உறிஞ்சப்படுவதைத் தடுத்து, அதை வெளியேற்ற உதவுவதாகவும் கூறுகிறார். இந்த உணவுமுறை மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து, தொடர்புடைய நோய்களைத் தடுக்கலாம் என்றும், மருந்துகளுக்கு அப்பால் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துமாறும் டாக்டர். பிள்ளை அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.