ஆட்டுக் காலில் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், சோடியம் மற்றும் பொட்டாஷியம் போன்ற எண்ணற்ற சத்துகள் நிறைந்திருக்கிறது என மருத்துவர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் கூறுகிறார். மேலும், எலும்பு மஜ்ஜையில் இரும்பு, சின்க், செலினியம், வைட்டமின், பி மற்றும் இ, ஒமேகா 3 மற்றும் 6 ஆகியவையும் காணப்படுகிறது.
Advertisment
அதன்படி, ஆட்டுக் காலை தண்ணீரில் கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கும் சத்துகள் அனைத்தும் தண்ணீரில் கலக்கும். இதில், மிளகு, வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டு போன்ற பொருட்களையும் சேர்த்து கொதிக்க வைக்கும் போது அதில் இருக்கக் கூடிய சத்தும் நமக்கு கிடைக்கும். அந்த தண்ணீரை வடிகட்டி குடிக்கும் போது, அவை எளிதாக செரிமானம் ஆகும் என்று ஸகுல் ராமானுஜ முகுந்தன் அறிவுறுத்துகிறார்.
ஆட்டுக் காலை எவ்வளவு நேரம் கொதிக்க வைக்கின்றோமோ அந்த அளவிற்கு சத்துகள் அதிகப்படியாக கிடைக்கும். இதனால், சூப் தயாரிக்கும் போது குறைந்தபட்சம் 1 மணி நேரம் கொதிக்க வைக்கலாம் என்றும் அவர் பரிந்துரைக்கிறார். சிலர் சுமார் 4 அல்லது 5 மணி நேரம் கொதிக்க வைத்து குடிக்கும் வழக்கத்தை கடைபிடிப்பார்கள். அந்த முறையும் நல்லது தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்டுக் கால் சூப் குடிப்பதால் நம் எலும்புகள் மற்றும் மூட்டுப் பகுதி வலிமையாகும். இதில் இருக்கும் சத்துகள் அனைத்தும் எலும்பின் உறுதித்தன்மைக்கு தேவையானவை. மேலும், இவை எலும்பு தேய்மானத்தை தடுக்கின்றன. அதன் காரணமாகத்தான் எலும்பு உடைந்தவர்களுக்கு, தொடர்ச்சியாக ஆட்டுக் கால் சூப் குடிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.
Advertisment
Advertisements
இந்த சூப்பை அடிக்கடி குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை வராது. இது செரிமான மண்டலத்தின் பணியை எளிதாக்குகிறது. அந்த வகையில் எலும்பு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்திலும் ஆட்டுக் கால் சூப் பெரும் பங்கு வகிக்கிறது. இதேபோல், இதில் இருக்கும் சத்துகள் நம் உடலுக்குள் சென்ற உடன் க்ளைசின் என்ற வேதிப்பொருளாக மாறும். இவை நரம்பு மண்டலத்தை நிதானப்படுத்தி சீரான தூக்கத்தை வழங்குகின்றன.
மூளை செயல்பாடுகள் மற்றும் உடல் எடை குறைப்பிலும் ஆட்டுக் கால் சூப் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆட்டுக் கால் சூப் மூலமாக உடலுக்குள் செல்லும் கலோரிகளின் அளவு குறைவாக இருக்கும். இவை பசியையும் கட்டுப்படுத்தக் கூடியது. சூப்பில் சேர்க்கக் கூடிய மஞ்சள் தூள், தக்காளி, பூண்டு ஆகியவற்றில் அன்டி இன்ஃப்ளமேட்டரி, அன்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் அன்டி மைக்ரோபியல் ஆகியவை இருக்கின்றன. இவையும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என மருத்துவர் ஸகுல் ராமானுஜ முகுந்தன் தெரிவித்துள்ளார்