நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு உடல் உபாதைகளுக்கு, குறிப்பாக உடல் எரிச்சல், பாதம் எரிச்சல், சிறுநீர் பாதை எரிச்சல் மற்றும் நாள்பட்ட சோர்வு போன்ற பிரச்சினைகளுக்கு இயற்கையான தீர்வு காணும் ஒரு வீட்டு வைத்தியத்தை பற்றி டாக்டர் செங்கோட்டையன் ஜோன்ஸ் டாக்டர் எஸ்.ஜே ஹாட்டிவி யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
நாவல் பழத்தின் மருத்துவ குணங்களை முன்னிறுத்தி, அதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என டாக்டர் கூறுகிறார். நாவல் பழம், இந்திய துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு மரத்தின் கனி. இதன் பழம் மட்டுமல்லாது, விதை, இலை, பட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது.
குறிப்பாக, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் நாவல் பழத்திற்கு முக்கிய பங்குண்டு. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் திறன் இதற்கு இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர் செங்கோட்டையன் ஜோன்ஸ் நாவல் பழத்தின் விதையில் இருந்து தயாரிக்கப்படும் பொடியின் நன்மைகள் பற்றி விரிவாக கூறுகிறார்.
நீரிழிவு நோயின் காரணமாக ஏற்படும் சிறிய இரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்கவும், பெரிஃபெரல் நியூரோபதி எனப்படும் நரம்பு பிரச்சினையை குணப்படுத்தவும் இது உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த பொடியை உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வில் இருந்து உடனடி நிவாரணம் பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
நாவல் பழ விதை பொடியை வீட்டிலேயே தயாரிக்கும் முறை: நன்கு பழுத்த நாவல் பழங்களை சேகரித்து, அதன் சதை பகுதியை நீக்கிவிட்டு விதைகளை வெயிலில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை உலர்த்த வேண்டும்.
காய்ந்த விதைகளின் மேல் தோலை உரித்துவிட்டு, உள்ளே இருக்கும் மென்மையான பகுதியை தனியாக எடுத்து நிழலில் இரண்டு நாட்கள் உலர்த்த வேண்டும். பின்னர், இந்த உலர்ந்த உட்பகுதியை நன்றாக அரைத்து சலித்து, காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்த பொடியை உட்கொள்ளும் முறை: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் (சுமார் 5 கிராம்) பொடியை சாதாரண தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். இந்த வைத்தியத்தை 30 முதல் 45 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று வீடியோவில் பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த முறை டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள எந்த வயதினருக்கும் ஏற்றது என்றும், இதற்கு பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. தேவைப்பட்டால், இதனை தொடர்ந்து அல்லது சிறிது இடைவெளி விட்டும் பயன்படுத்தலாம்.
இது தனது நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாக டாக்டர் கூறுகிறார். மேலும், நாவல் பழ விதை பொடி உடலில் உள்ள அதிகப்படியான இரத்த சர்க்கரையை சிறுநீர் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.