கறிவேப்பிலை குறித்து இன்றைய தாவரவியல் விஞ்ஞானத்தை ஆராய்ந்து பார்த்தால், பவ்லேறு நோய்களை அவை தடுப்பதாக அறியப்படுகிறது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இன்று பலரை அச்சுறுத்தி வரும் சர்க்கரை நோயை தடுப்பதில் கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மூலிகை மருந்துகளில் கூட அதிகமாக கறிவேப்பிலை சேர்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணை நோயாக இரத்த கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கறிவேப்பிலை கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதால் இதனை மருந்தாக பயன்படுத்தலாம் என சிவராமன் பரிந்துரைத்துள்ளார். இன்சுலினை ஊசி மூலமாக ஏற்றாமல், மாத்திரையை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என சில நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும்.
அவர்கள் தினசரி கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும். ஆனால், நாம் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை ஒரு போதும் கைவிட்டுவிடக் கூடாது. அவற்றுடன் சேர்த்து தான் உணவு மூலமாக மருத்துவத்தை தேட வேண்டும் என சிவராமன் கூறுகிறார்.
கறிவேப்பிலையில் இரும்புச் சத்தும் காணப்படுகிறது. இவற்றை தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கறிவேப்பிலையை பயன்படுத்தும் போது அவை ஃப்ரெஷ்ஷாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அப்போது மட்டுமே அவற்றின் முழுமையான சத்துகளை பெற முடியும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.