நமது வீடுகளில் நாம் அன்றாடம் சமைக்கும் ரசம், வெறும் ஒரு உணவல்ல; அது நம் முன்னோர்களின் அற்புதமான மருத்துவ அறிவியலின் வெளிப்பாடு என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார். எத்தனை அக்கறையுடன் நம் மூதாதையர்கள் எண்ணற்ற மசாலாப் பொருட்களையும், மணமூட்டிகளையும் ஒன்றிணைத்து ரசத்தை ஒரு நடு உணவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் வியப்பு மேலிடுகிறது என்றார்.
கொங்கு மண்டலத்தில், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு "செலவு ரசம்" என்ற ஒரு விசேஷ ரசம் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆர்வத்தோடு விசாரித்தபோது, அந்தப் பெயரின் காரணம் பலருக்கும் தெரியவில்லை. ஆனால், ஒரு பெரியவர் விளக்கினார்: "பொதுவாக ரசத்திற்குரிய பொருட்கள் எங்கள் தோட்டத்திலேயே கிடைக்கும். ஆனால், சில பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும். அந்த 'செலவு' செய்து வாங்கி வரும் பொருட்களையும் சேர்த்து, என் மகள் மிகச் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பயன்படுத்தக்கூடிய ரசம்தான் செலவு ரசம்" என்றார்.
ஒரு குடும்பத்தின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யப்படுவதைப் பெருமையாகப் பேசிய நம் முன்னோர்களின் சமூகப் பார்வை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு பாரம்பரிய உணவுப் பொருளுக்கும் பின்னால் இப்படி ஒரு ஆழ்ந்த கருத்து உள்ளது. அப்படியான சிறப்பு மிக்க நமது பாரம்பரிய உணவுகளை விட்டுவிட்டு, இன்றைய "குப்பை உணவுகள்" பின்னால் ஏன் ஓட வேண்டும் என்றார்.
தேவையான பொருட்கள்:
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மஞ்சள் தூள் - சிறிதளவு
மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
நாட்டுத்தக்காளி - 2 பெரியது
பூண்டு - 5 பல்
சின்ன வெங்காயம் - 5
கருவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
உப்பு
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, மல்லித்தூள், மஞ்சள் தூள், பூண்டு, வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை அதில் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, உப்பு போட்டு லேசான கொதி வரும் வரை விடவும். இறுதியாக கொதி வரும் சமயத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான செலவு ரசம் தயார். இந்த ரசம் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.