/indian-express-tamil/media/media_files/2025/02/28/ECE29SMUdbxxW1aVY7Sx.jpg)
மதிய உணவுக்கு முன்பு தினமும் பச்சையாக ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மதிய உணவுக்கு முன்பு தினமும் பச்சையாக ஒரு கேரட் சாப்பிடுங்கள், உடல் எடை குறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் பரிந்துரைக்கிறார்.
மதிய உணவுக்கு முன்பு தினமும் பச்சையாக ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார். டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: “ஒரு நாளைக்கு ஒரு பச்சை கேரட் சாப்பிடுவதன் மூலமாக முக்கியமான 2 நன்மைகள் இருக்கிறது. தினசரி சூரியனால் 2 உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. ஒரு உறுப்பு நம்முடைய தோல்கள், அதிகமான வெப்பத்தால் பாதிக்கப்படுகிறது. இன்னொரு உறுப்பு கண்கள். கண்களில், சூரியனின் கடுமையான வெப்பத்தினாலும் கதிர்களாலும் எளிதாக கண்புரை பிரச்னைகள் உண்டாகிறது. இந்த இரண்டு விஷயங்களையும் குறைப்பதற்கு, கேரட் ரொம்ப ரொம்ப நல்லது. கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா என்கிற சத்தும் லூட்டின் என்கிற சத்தும் மற்ற சில ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சத்துகளும் வைட்டமின் சத்துகளும் நம்முடைய தோல்கள் பளபளப்பாக இருக்க உதவுகிறது. கண்கள், ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. அதற்காக எத்தனை கேரட்கள் ஒரு நாளைக்கு சாப்பிடலாம் என்றால், ஒரு நாளைக்கு ஒரு பச்சை கேரட் சாப்பிடுவது நல்லது. ஒருவேளை, 4 கேரட் 5 கேரட் சாப்பிட்டால், அதாவது 5 கேரட் வைத்து 250 மி.லி ஜூஸ் போட்டால், 45,000 ஐயு வைட்டமின் ஏ இருக்கிறது. இது டாக்ஸிசிட்டி, நம்முடைய உடலுக்கு அதிகமன கெரோட்டின் போனால், நச்சுத்தன்மை என்ன அதனுடைய அறிகுறிகள் என்ன என்பதை பின்னால் சொல்கிறேன்.
அதற்கு முன்னால், நன்மைகளை சொல்லிவிடுகிறேன். 100 கிராம் அளவுக்கு ஒரு கேரட் சாப்பிடுகிறோம் என்றால், அதில் 41 கலோரி இருக்கிறது. மதியம் சாப்பிடுவதற்கு முன்னால், ஒரு கேரட் சாப்பிடுகிறோம் என்றால், இந்த 41 கலோரிகள் என்பது நாம் 400 கலோரிகளை சாப்பிட்ட ஒரு திருப்தியைத் தருகிறது. மதியம் சாப்பிடுவதற்கு முன்னால் 1 கேரட் சாப்பிடுவதன் மூலம் வயிறு நாம் நிரம்ப சாப்பிட்ட உணவு ஏற்படுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது.
அப்படி ஒரு கேரட் சாப்பிட்ட உடன் இந்த கேரட் குடலுக்குள் போகும்போது என்ன ஆகிறது என்றால், இந்த கேரட்டில் இருக்கக்கூடிய இன்னொரு சத்து பெக்டின், இது கொய்யாப்பழத்திலும் இருக்கிறது. கொய்யாப்பழம் எப்படி ஜீரணத்துக்கு உதவுகிறது என்பது தெரியும். அதே போலதான், கேரட்டும் நம்முடைய ஜீரணமண்டலத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.
ஒரு மனிதனுடைய மூளை அவனுடைய வயிற்றில்தான் இருக்கிறது என்று சொல்வார்கள். இதை எதனால், சொல்கிறோம் என்றால், வயிற்றினுடைய ஆரோக்கியத்திற்கும் மூளையின் ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இப்போது சமீபத்திய ஆராய்ச்சிகளில் நிறைய தெரிய வருகிறது.
வயிற்றின் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்க வேண்டுமானால், வயிற்றில் இருக்கக்கூடிய நல்ல கிருமிகள். அந்த நல்ல கிருமிகளால் நாம் சாப்பிடுகிற உணவில் உள்ள சத்துகள் உறிஞ்சப்பட்டு தேவையில்லாத உணவுகள் நீக்கப்படுவதற்கு இந்த பாக்டீரியாக்கள் ரொம்ப தேவை. அந்த பாக்டீரியாக்களை கொடுக்கக்கூடியது கேரட்டில் இருக்கக்கூடிய சில சத்துகள்.
பெக்டின் என்பது கரையக்கூடிய ஒரு நார்ச்சத்து. இன்சாலிபிள் ஃபைபர் என்று சொல்லக்கூடிய கரையாத நார்ச்சத்துகளும் உள்ளது. அதுதான், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், லிக்னின் என்று சொல்வோம். அதுவும் இந்த கேரட்டில் அதிகமாக இருக்கிறது.
இந்த நார்ச்சத்து அதிகமாக இருக்கிறதால், ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ரொம்ப உதவிகரமாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் மதியம் உணவுக்கு முன் ஒரு கேரட் சாப்பிடுவது நல்லது. இந்த கேரட்டை ஏன் மதியம் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறேன் என்றால், இரவு நேரத்தில் பச்சை கேரட்டை சாப்பிட வேண்டாம். ஏனென்றால், பீட்டா கரோட்டின், கரோட்டின் என்பது நம்முடைய தூக்கத்தின் அளவைக் குறைக்கக்கூடிய ஒரு விஷயம். அதனால், கேரட்டை மதியம் நேரத்தில் சாப்பிடுவது நல்லது.
ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகம் உள்ள கேரட்டை எடுத்துக்கொள்வது நல்லது. இதில் சோடிய 65 மி.கி இருக்கிறது ஆனால், பொட்டாசியம் 365 மி.கி என்ற அளவில் இருக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்துக்கு இணையானதுதான் கேரட். ரத்தம் உறைதல் தன்மைக்கு தேவையான சத்து கேரட்டில் இருக்கிறது. கேரட் போன்ற பெரிய பிரச்னைகள்கூட வராமல் தடுப்பதற்கான திறன் இந்த கேரட்டில் இருக்கிறது.
கேரட் சாப்பிடுவதால் வேறு ஏதாவது பிரச்னைகள் வருமா என்றால், சில பேருக்கு ரொம்ப அரிதாக அலர்ஜி ஏற்படலாம். பச்சை கேரட் சாப்பிட்டவுடன் வாயில், நமநமனு அரிப்பு ஏற்படுகிறது என்றால் அவர்களுக்கு கேரட் அலர்ஜி என்று அர்த்தம். அவர்கள் கேரட்டை தவிர்த்துவிடுங்கள்.
முதலில் சொல்லியிருந்தேன், ஒரு நாளைக்கு 4-5 கேரட் சாப்பிட்டால், 45,000 ஐயு வைட்டமின் ஏ நம்முடைய உடலுக்கு உள்ளே போனால், வைட்டமின் ஏ டாக்ஸிசிட்டியால் என்ன அறிகுறிகள் ஏற்படும் என்றால், கேரட் இயற்கையிலேயே நிறம் கொடுக்கக்கூடிய ஒரு விஷயம். நம்முடைய தோல்கள் எல்லாம் ஆரஞ்ச் நிறத்தில் மாறிவிடும். அதுமட்டுமில்லை உங்கள் முடிகள் வறண்டு போய்விடும். தோல்கள் வறண்டு போய்விடும். முடிகள் அதிகமாகக் கொட்ட ஆரம்பிக்கும். மூட்டு வலிகள் அதிகமாக வரும். இந்த கரோட்டினாய்டு சத்துகள் அதிகமாகி இருந்தால், சாப்பிடாமலே கேஸ் ஃபார்மேஷன் மாதிரி வயிறு உப்பசமாகி காற்றுப் பிரிதல் போன்ற பிரச்னைகள் அதிகமாக இருக்கும். அப்போதே தெரிந்துகொள்ளலாம் ஏதோ ஒரு உணவு ஒத்துக்கொள்ளவில்லை, அதனுடைய ஆரம்ப அறிகுறிகள் என்று தெரிந்துகொள்ளலாம்.
அதனால், எந்தவொரு உணவாக இருந்தாலும் அதனுடைய நன்மை தீமைகள் முழுமையாகத் தெரிந்துகொள்வது முக்கியம். மற்றபடி தினசரி ஒரே ஒரு கேரட் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள். கேரட்டை நன்றாக கழுவிவிட்டு சாப்பிடுங்கள்.” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.