செவ்வாழைப்பழம் மற்றும் நேந்திரம் பழத்தின் நன்மைகள் குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் விளக்கமாகக் கூறியுள்ளார். டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: “வாழைப்பழங்களில், செவ்வாழைப் பழம், நேந்திரம் பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்வது உண்மையா, வாழைப்பழத்தில் அடர்த்தியான மாவுச்சத்து உள்ளது. குறிப்பாக செவ்வாழைப் பழமாக இருக்கட்டும், நேந்திரம் பழமாக இருக்கட்டும் இதில் இருந்து கிடைக்கக்கூடிய மாவுச்சத்து ஒரு அடர்த்தியான மாவுச்சத்து. இது சத்தானதும்கூட, இதில் நிறைய மினரல்கள், தாது ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால், அதனால், இந்த செவ்வாழைப் பழம், சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்று சொல்லவே முடியாது. ஏனென்றால், இதில் மாவுச் சத்து இருந்தாலும்கூட, நாம் எடுத்துக்கொள்ளும் மற்ற உணவுகள்தான் நமது உடல் எடை கூடுவதைத் தீர்மானிக்குமே தவிர தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று நினைத்தால் அது தவறு.
வாழகைக்காயை எடுத்துக்கொண்டால், 100 கிராம் வாழைக்காயில், 14 கிராம் மாவுச்சத்து, 64 கலோரி கிடைக்கும். இதுவே 100 கிராம் வாழைப்பழம் எடுத்துக்கொண்டால், 27 கிராம் மாவுச்சத்தும், 116 கலோரி கிடைக்கும்.
இதில் எந்தவிதமான மாவுச்சத்து நம்முடைய உடலுக்கு கிடைக்கிறது என்பதுதான் முக்கியம். மைதாவில், பேக்கரியில் , சர்க்கரையால் செய்யப்பட்ட உணவுகளில் இதே அளவு கலோரிகள் நமக்கு கிடைக்கும். அதில் குறைவான கலோரிகள் இருக்கிற மாதிரி இருக்கும், அது ரொம்ப கெட்ட மாவுச்சத்து. அதுதான் நம்முடைய உடல் எடையை அதிகரிக்க ரொம்ப எளிதாக உதவி செய்யும்.
இந்த வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மாவுச்சத்து, அந்த வகையைச் சேர்ந்தது கிடையாது. இது நல்ல மாவுச்சத்து. இந்த செவ்வாழைப்பழம், குறிப்பாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறவர்களுக்கு, அஜீரணக் கோளாறு இருக்கிறவர்களுக்கு, மிகவும் ஒரு நல்ல உணவு மட்டுமல்ல, ஒரு மருந்தாகவே செயல்படும். மலச்சிக்கல் இல்லாமல் பாதுகாக்கும்.
இந்த செவ்வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய மெக்னீசியம், பொட்டாசியம், ரத்த அளவைக் குறைக்கக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் இதயநோய் பிரச்னை இருக்கக்கூடியவர்களும் சாப்பிடக்கூடியதாகத்தான் இந்த செவ்வாழைப்பழம் இருக்கிறது.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த செவ்வாழைப்பழத்தை சாப்பிடுவதால், குடலில் நல்ல கிருமிகள் உற்பத்தியாக உதவிகரமாக இருக்கிறது.
தினமும் ஒரு செவ்வாழைப்பழம் என்று இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக செவ்வாழைப்பழம் எடுத்துகொள்ளும்போது, நம்முடைய குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு பல மடங்கு அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன.
செவ்வாழைப்பழம் மாதிரியெ நேந்திரம் பழமும் நல்ல மாவுச்சத்து கொண்டது. ஆனால், நேந்திரம் பழம் சிப்சாக சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு நல்லது கிடையாது.
நாம் சாப்பிட்ட பிறகு, வேகமாக சர்க்கரை அளவு அதிகரிப்பதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்று கூறுகிறார்கள். செவ்வாழைப்பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 45% எனவும் நேந்திரம் பழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 51% எனவும் உள்ளது. இந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு 55-க்கு குறைவாக இருந்தால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய உணவுகள் என்று சொல்லியிருக்கிறேன். அதனால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பழங்கள் வாரத்திற்கு 2 முறை சாப்பிடக்கூடியதாக உள்ளது.
செவ்வாழைப்பழம் பசியைத் தூண்டும் என்பதால், இந்த செவ்வாழைப்பழம், நேந்திரம் பழம் குழந்தைகளுக்கு கொடுங்கள் என்று பொதுவாகக் கூறுவது ஏனென்றால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்பதால்தான். ஆரோக்கியமாக உள்ளவர்கள் தினமும் 1 வாழைப்பழம் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு 2 முறை வாழைப்பழம் சாப்பிடலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் என்பதால், கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழம் கட்டாயம் சாப்பிடக் கூடாது. காய்கறிகளே எடுத்துக்கொள்ளாமல் நிறைய நொறுக்குத் தீனி சாப்பிடுபவர்களுக்குதான் உடல் எடை அதிகமாகும்.
அதனால், சரிவிகித உணவுமுறையை பின்பற்றுகிற எல்லோருக்கும், பரிந்துரைப்பது என்னவென்றால், நாம் சாப்பிடுகிற தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். கால்வாசி அளவு புரதங்கள், மீதி கால்வாசி ஆரோக்கியமான மாவுச்சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொண்டால், தேவையான அளவு அதிகரித்து அந்த எடை பராமரிக்கப்படும்.
பொதுவாக நேந்திரம் வாழைப்பழம் அதிகம் வாங்கலாம், அதன் தோல் கருப்பு நிறமாக மாறினாலும் உள்ளே இருக்கக்கூடிய பழகம் நன்றாகவும் சுவை மாறாமலும் இருக்கும். நன்றாக பழுத்த பிறகும்கூட ஒரு 5 நாள் வரைக்கும் தாங்கக்கூடியதாக இருக்கும்.
செவ்வாழைப்பழம் பல்வேறு நன்மைகள் கொண்ட பழம். குறிப்பாக, ரத்தசோகை பிரச்னை இருக்கிறவர்களுக்கும், நரம்புமண்டலம் சார்ந்த பிரச்னை இருக்கிறவர்களுக்கும் நல்லது. மூளையின் செயல்பாடு நல்ல சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதனால்தான், குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழம் கொடுக்கச் சொல்வது” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.