பீரியட்ஸின் 15-28 நாள் வரை வெந்தயம் இப்படி சாப்பிடுங்க… ரத்தபோக்கு, வலி குறையும்; டாக்டர் சிவராமன்
பெண்களுக்கு மாதவிடாய் ரத்தப் போக்கு வலி குறைவதற்கு, மாதவிடாய்க்கு பிறகு, 15-28 நாட்கள் வரை வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கு, வலியைக் குறைப்பதற்கும் பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்தும் டாக்டர் சிவராமன் ஆலோசனைகளை வழங்குகிறார்.
பெண்களுக்கு மாதவிடாய் ரத்தப் போக்கு வலி குறைவதற்கு, மாதவிடாய்க்கு பிறகு, 15-28 நாட்கள் வரை வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்கள் என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
சித்த மருத்துவம் குறித்தும், நம்முடைய பாரம்பரிய உணவுகளில் உள்ள மருத்துவ குணம், ஆரோக்கியம் குறித்தும், இயற்கை உணவுகள் குறித்தும் தமிழகம் முழுவதும் பல மேடைகளில் அறிவியல் மொழியில் பேசி பரப்பியவர் டாக்டர் சிவராமன். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கு, வலியைக் குறைப்பதற்கும் பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்தும் டாக்டர் சிவராமன் ஆலோசனைகளை வழங்குகிறார்.
மாதவிடாயின்போது, பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் குறித்து டாக்டர் சிவராமன் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில், டாக்டர் சிவராமன் கூறியிருப்பதாவது: “பெண்களுக்கு மாதவிடாய் ஆகிற 4 நாள் எப்படி இருக்க வேண்டும் என்பதை முதலில் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் நாள் லேசாக, இயல்பாக ரத்தப்போக்கு இருக்க வேண்டும். இரண்டாவது நாள், மூன்றாவது நாள் நல்ல ரத்தப்போக்கு இருக்கும். நான்காவது நாள் காலையில் சற்றே குறையத் தொடங்கி கட்டுப்பாட்டுக்கு வர வேண்டும். இதுதான் இயல்பாக நடப்பது. ஆனால், ஒருவேளை அதிக ரத்தப்போக்கு இருந்தது என்றால், அதனால், அந்த குழந்தைக்கு ஒரு அழற்சி இருக்கும். அப்போது, அந்த பெண்ணுக்கு நல்ல இரும்புச் சத்துள்ள உணவுகளைக் கொடுக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அப்போது, அந்த பெண்ணுக்கு கூடுதலாக அத்திப்பழம் கொடுக்க வேண்டும், கூடுதலாக மாதுளம்பழச் சாறு கொடுக்க வேண்டும், கூடுதலாக எள்ளில் செய்யப்பட்ட மிட்டாய் கொடுக்க வேண்டும். எள் கொடுத்தால் நிறைய சூடாகிவிடும் என்று நினைக்கலாம், அப்படி இல்லை. மாதவிடாய் சுழற்சியில், முதலில் அந்த 3-4 நாட்களுக்கு எள்ளுருண்டை, எள்ளூ மிட்டாய் கொடுக்க வேண்டும். ரத்தப்போக்கு இருகும்போது எள்ளுமிட்டாய் கொடுப்பது நல்லது.
Advertisment
Advertisements
மாதவிடாய் முடிந்த பிறகு உடனே 4-வது நாளுக்கு பிறகு, கருமுட்டை வளரக்கூடிய பருவம். 10 நாட்கள் மெல்ல மெல்ல ஃபாலிக்கிள் விரிந்துகொண்டே வரும். 14வது நாள் அது உடைந்து அதிலிருந்த கருமுட்டை கருக்குழாய் வழியாக கருப்பையை நோக்கி நகர்ந்து வரும். அதுதான் உடல் இயங்கியல். அப்போது, மாதவிடாய் முடிந்த அடுத்த 10 நாட்கள் பெண்களுக்கு ரொம்ப முக்கியமான நாள். அந்த 10 நாட்களுக்கு அவர்களுக்கு உளுந்து கொடுக்க வேண்டும். உளுந்து வடை, உளுந்து தோசை, உளுந்தங் கஞ்சி என உளுந்தை எப்படி வேண்டுமானாலும் கொடுங்கள். கருப்பு உளுந்தை வறுத்து பொடி செய்து கொடுங்கள். மாதவிடாய்க்கு பிறகு, 4-வது நாளில் இருந்து 15-வது நாள் வரை உளுந்து கொடுக்க வேண்டும். உளுந்து நல்ல புரத உணவு.
கருமுட்டையில் இருந்து கருக்குழாய்க்குள் வந்த பிறகு, கருப்பையை வலுவாக வைத்துக்கொள்வதற்கும் அதிக ரத்தப்போக்கு வராமல் இருப்பதற்கும், மாதவிடாய் சமயத்தில் வலி இல்லாமல் இருப்பதற்கும் வெந்தயம் கொடுக்க வேண்டும். மாடவிடாய்க்கு பின், 15-வது நாளில் இருந்து 28வது நாள் வரைக்கும் வெந்தயம் ஏதாவது ஒரு வகையில் சாப்பிட வேண்டும். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். ஊறவைத்து கொடுங்கள், வெந்தயத்தை முளைகட்டி வைத்து கொடுங்கள்.
எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் சமயத்தில் முதல் 4 நாட்களுக்கு எள்ளு, அதற்கு பிறகு 15வது நாள் வரைக்கும் உளுந்து, அதற்கு பிறகு வெந்தயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உணவு சுழற்சியை முறையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து குறைந்துவிடாமல் இருக்க ஹீமோகுளோபின் அளவு 11 அளவுக்கு மேல் இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு 9-8 என்று குறையும்போதுதான் களைப்பு, சோர்வு ஏற்படும். ஹீமோகுளோபின் அளவு 7 க்கு கீழே குறையும்போதுதான் அதன் குணங்கள் தெரியும். அதனால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அவ்வப்போது சோதித்து பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு உரிய இரும்புச் சத்தைக் கூட்டுவதற்கு முருங்கைக் கீரையை சாப்பிடுங்கள், பேரீச்சம் பழம் கொடுங்கள், அத்திப்பழம் கொடுங்கள், எள்ளுருண்டை போன்றவற்றை கொடுங்கள்.
தானியங்களில் கம்பு, இரும்புச் சத்து அதிகமாக இருக்கிற சிறுதானியங்களில் நம்பர் 1 கம்புதான். அரிசியைவிட கம்புவில் 8 மடங்கு இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. வாரத்திற்கு 2 முறையாவது கம்பச்சோறு கொடுக்கலாம். கம்பங்கூழ் கொடுக்கலாம். வெயில்காலத்தில் கம்பங்கூழில் மோர்விட்டு சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு, கம்பங்கூழை வீட்டில் கொடுக்க வேண்டும். இது எல்லாம் இருப்புச்சத்தைக் கூட்டும்” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.