பாரம்பரிய உணவுகளில் உள்ள நன்மைகள், மருத்துவ குணங்கள், சித்த மருத்துவம், இயற்கை உணவு முறைகள் குறித்து பல நகரங்களில், ஊர்களில் கருத்தரங்குகளில் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மருத்துவர் சிவராமன். பாரம்பரிய உணவு முறைகளின் மகத்துவத்தை எடுத்துக் கூறும் மருத்துவர் சிவராமன் மூட்டு வலிக்கு இந்தக் கீரை தீர்வு என்று கூறுகிறார்.
மூட்டு வலி என்றாலே வயோதிகத்தில் ஏற்படுகிற எலும்புத் தேய்வினால் வருகிற மூட்டுவலியைக் கூறுவார்கள். அதுதான் அதிகம். ஆனால், இப்போது எல்லாம் 30-32 வயதிலேயே பலருக்கும் மூட்டு வலி வருகிறது. இந்த வயதில் மூட்டு வலி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ரொமட்டட் ஆர்த்ரிட்டீஸ் என்கிற மூட்டு வலிக்கு சிகிச்சை தேவை என்பது பற்றி மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
இது இல்லாமல், உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றால் ஏற்படும் மூட்டுவலியைத் தவிர்க்க, உணவில் புளியைக் குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். மூட்டு வலி இருப்பவர்கள் 2-3 மாதங்களுக்கு புளியை முழுவதுமாக தவிர்ப்பது நல்லது. அதே போல, தரைக்கு கீழே விளையும் பொருட்களான கிழங்கு வகைகள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். அதாவது உருளைக் கிழங்கு, சேப்பங் கிழங்கு, பீட்ரூட் ஆகியவற்றைத் தவிர்க்கலாம். இதில் கருணைக்கிழங்கு, கேரட் சிறிதளவு எடுத்துக்கொள்ளலாம்.
அதே போல, குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும், அதாதவது ஃபிரிட்ஜில் இருந்து அப்படியே எடுத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மூட்டு வலி உள்ளவர்கள் நார்ச்சத்து உள்ள பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து உள்ள பொருட்கள் எடுத்துக்கொள்வதால், உடல் எடை குறையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பு குறையும். நார்ச்சத்து நிறைய எடுத்துக்கொள்ள வேண்டுமானால், வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைய இருக்கிறது. கீரைகளில் நிறைய நார்ப்பொருட்கள் இருக்கிறது. குறிப்பாக முடக்கறுத்தான் கீரையை எடுத்துக்கொள்ளலாம். இதன் பெயரே, நம்முடைய உடலை முடக்கி வைக்கக்கூடிய மூட்டு வலியை அறுக்கக்கூடிய தன்மை இருப்பதனால்தான், முடக்கறுத்தான் கீரை என்று கூறுகிறார்கள். இந்த முடக்கறுத்தான் கீரையை அடை மாதிரி செய்து சாப்பிடலாம். தோசையில் செய்து சாப்பிடலாம்.
அதே போல, சக்ரவர்த்தி கீரை என்று சொல்வார்கள், அதை சாப்பிடலாம், அதே போல, லட்சக் கோட்டை கீரை என்று சொல்வார்கள். இந்த கீரைகளை சாப்பிட்டால், வாயுவை வெளியேற்றி, மூட்டுவலியைக் குறைக்கக்கூடிய கீரைகள். நம் அன்றாட உணவில் இந்த உணவுகளை சேர்த்துக்கொள்வது நல்லது.
மூட்டு வலி இருப்பவர்கள், உணவில் வாயுவை உருவாக்கக்கூடிய பொருட்களை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும். யோகாசனம் செய்யுங்கள். பிறகு, தேவையான மருந்து எடுத்துக்கொள்ளுங்கள். தசைகளை வலுப்படுத்த பயிற்சி செய்யுங்கள் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“