சர்க்கரை நோய் என்று கூறப்படும் நீரிழிவு நோய் தேசிய வியாதி என்று கூறும் அளவுக்கு பலருக்கும் நீரிழிவு நோய் இருக்கிறது. இதனால், சர்க்கரை நோயாளிகள் பலரும் தங்கள் ரத்தத்தின் சர்க்கரை அளவை, உணவுமுறை மூலம் கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், அவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவுப் பொருட்களில் என்ன சத்து இருக்கிறது, எந்த வகையான கார்போ ஹைட்ரேட் இருக்கிறது என்பது உணவை எடுத்துக்கொண்டு மேலும் சிக்கலுக்குள்ளாகின்றனர்.
உணவுமுறை மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முயற்சி செய்யும் சர்க்கரை நோயாளிகள் எத்தகைய உணவு எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர் சிவராமன் சில குறிப்புகளைக் கூறியுள்ளார்.
ஒரு யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் கூறியதை அப்படியே இங்கே தருகிறோம். “அதாவது முழுமையாக கார்போஹைட்ரேட்டைடத் தவிர்க்கக் கூடாது. அரிசி, கோதுமையை எடுத்துவிட்டால், கார்போஹைட்ரேட் இல்லை என்று நிறைய பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். கீரைகள்கூட கார்போஹைட்ரேட்தான். கீரைகளில் நிறைய கார்போஹைட்ரேட் சத்து இருக்கிறது, ஆனால், அதனுடைய வடிவம் வேறானது. அந்த வடிவம் எப்படியானது என்றால், குளுகோஸை வேகமாக ரத்தத்தில் கலக்கவிடாமல், மெல்ல மெல்ல கலக்கக்கூடிய தன்மை அந்த கீரையினுடைய நார்கள் பெற்றிருக்கிறது. அதனால், கீரை கார்போஹைட்ரேட்டாக உடலுக்கு கொடுத்தாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்கக்கூடிய தன்மை கொண்டது.
அதே மாதிரி, புரதங்கள் என்று எடுத்துக்கொண்டால், நாம் நிறைய பேர் நினைக்கிறோம், உளுந்து, பயறு வகைகள் எல்லாமே வெறும் புரதம் இல்லை. அவை, அதிகபட்சம் புரதச்சத்து உள்ள தானியங்கள், 40 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரைக்கும் இருக்கும். உதாரணமாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், உளுந்தில் 23-24 சதவீதம் புரதம் இருக்கிறது. மீதி இருக்கிற பகுதி கார்போஹைட்ரேட்தான். ஆனால், நாம் தானியங்களை சாப்பிட எடுக்கும்போது, 50-60 கிராம் எடுப்பதனால், அதில் கார்போஹைட்ரேட் அளவு மிகக் குறைவாக இருக்கும். அதனால், நாம் ஒரு புரி்தல் வைத்திருக்க வேண்டும்.
அரிசி, கோதுமை எடுத்துக்கொள்ளும்போது, குறைத்துக்கொள்ளலாம், மற்றபடி உளுந்து போன்ற, பயறுகளை புரதங்களோடு சேர்ந்த கார்போஹைட்ரேட்களை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். இல்லை நமக்கு அதிக நார்ச்சத்து இல்லாமல், அதிக கார்போஹைட்ரேட் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் சிறுதானியங்களை இரவில் சாப்பிடலாம். சிறுதானியம் என்று சொல்லப்படுகிற, திணை, கம்பு, ராகி, சோளம், குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் எல்லா நாடுகளிலும் கிடைக்கக்கூடிய அளவில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக, திணை அரிசி, வரகு அரிசி இரண்டும் சர்க்கரை நோய்க்கான ஒரு சிறப்பான தானியங்கள்.இதில் என்ன சிறப்பு என்றால், நிறைய கனிமச் சத்துக்கள் இருக்கும், சர்க்கரையை வேகமாக ரத்தத்தில் கலக்க விடாத, குறைந்த கிளைசெமிக் தன்மை இந்த தானியங்களில் உண்டு.
திணை அரிசி, வரகு அரிசியில் உப்புமா, கிச்சடி, பொங்கள் மாதிரி செய்து சாப்பிடலாம். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் கஞ்சியாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனென்றால், கஞ்சியாக எடுத்துக்கொண்டால் அது வேகமாக ரத்தத்தில் கலந்துவிடும். அதனால், நாம் சாதாரணமாக எப்படி, அரிசியை எப்படி வேகவைத்து சோறாக்கி சாப்பிடுகிறோமா, அதே மாதிரி வரகு அரிசியை நாம் குக்கரி வேகவைத்து சாப்பிட்டோம் என்றால், நமக்கு சர்க்கரை அளவு வேகமாகச் சேராது. குறைந்த அளவு சாப்பிட்டாலே இரவு முழுவதும் பசியைத் தாங்கக்கூடிய தன்மை அதில் உண்டு. அதனால், நீங்கள் உணவைத் திட்டமிடும் பட்சத்தில், வெறும் கலோரி கணக்கு, கார்போஹைட்ரேட் கணக்கை மட்டும் பார்க்காமல், மருத்துவப் பயன்கள் அதில் எந்த அளவுக்கு இருக்கிறது, பாரம்பரிய உணவுகளாக இருக்கும் பட்சத்தில், அது கூடுதல் சத்துக்களைம் சேர்த்து தருகிறது என்பதைப் பார்த்து, அதற்கேற்றார்போல, நீங்கள் உணவுகளை எடுத்துகொள்வது ரொம்ப சாலச்சிறந்த விஷயம்” என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“