தலைமுடி நன்றாக வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், சில கீரைகள் நம்முடைய தினசரி உணவில் இருக்க வேண்டும். தினசரி கீரைகளை சாப்பிடுவது, பழங்கள் தினசரி சாப்பிடுவது, நல்ல மோர் குடிப்பது ஆகியவற்றை செய்பவர்களுக்கு தலைமுடி உதிர்வது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரும்புச் சத்து மற்றும் சில புரதச்சத்து குறைவினால்தான் தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது என்று தலைமுடி உதிர்வு குறித்து ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் தெளிவாகக் கூறிவருகிறார்கள் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமுடி உதிர்வைத் தடுக்க, இரும்புச் சத்து மற்றும் சில புரதச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம் என்று கூறும் டாக்டர் சிவராமன், நம்முடைய உணவில் தினசரி ஏதாவது ஒரு கீரை இருக்க வேண்டும். அது அரைக்கீரை, சிறுகீரை, முளைக் கீரை, தண்டு கீரை என ஏதாவது ஒரு கீரையை கொஞ்சம் பாசிப் பருப்புடன் சமைத்து சாப்பிட்டால் கீரையில் இருந்து இரும்புச் சத்தும் மற்ற கனிமச் சத்தும் கிடைக்கும். பாசிப் பருப்பில் இருந்து புரதமும் கிடைக்கும். இதனுடன் பழங்களையும் மோரையும் எடுத்தால், ஆண்டி ஆக்ஸிடண்ட் கிடைக்கும், மிகவும் சிறிய அளவிலான கனிமங்களும் கிடைக்கும். தினசரி உணவில் இருக்க வேண்டும்.
“புரோ பயோடிக்கா உடலுக்கு லேப்டோ பேசிலஸ் கொடுத்து உடலில் பித்தத்தை குறைக்கக்கூடிய ஒரு நல்ல அற்புதமான பொருள் மோர்; அந்த மோரை நாம் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது அது நமக்கு நல்ல முடி வளர்ச்சிக்கு உள்ளுக்குள்ள உதவியாக இருக்கும்” என்று டாக்டர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
கீரைகள் குறித்து டாக்டர் சிவராமன் கூறுகையில், “குறிப்பாக சில கீரைகள், கரிசலாங்கண்ணிக் கீரை, முருங்கைக்கீரை இரண்டிலுமே நன்றாக தலை முடி வளர பயனுள்ள பல நல்ல கனிமங்கள் இருக்கிறது. கரிசலாங்கண்ணி கீரை பித்தத்தை குறைக்கும் உடலுக்கு இரும்புச்சத்து முதலான நல்ல கனிமங்களை கொடுக்கும். கூடுதலாக தலைமுடியை நன்றாக வளர்ச்சி அடைய செய்ய சில சத்துக்கள் கரிசலாங்கண்ணிக் கீரையில் இருக்கிறது. முடி வளர்ச்சி தைலங்களில் பெரும்பாலான தைலங்களில் இருக்கக்கூடிய கீரை கரிசலாங்கண்ணி கீரை, அதை நாம் உணவில் எடுத்துக் கொள்ளும்போது, ஈரல் நன்றாக வலுப்பெறும், பித்தம் நன்றாக குறையும், இரும்புச் சத்தும் நிறைய கூடும்.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
பழங்கள் குறித்து டாக்டர் சிவராமன் கூறுகையில், பழங்களை எடுத்துக் கொண்டால், நன்றாக உலர்ந்த அத்திப்பழம், காய்ந்த திராட்சை, மாதுளம் பழம், சிவப்பு கொய்யா பழம், இந்த பழங்களில் ஏதாவது ஒன்று தினசரி சாப்பிட வேண்டும். இந்த பழங்களை எடுத்துக் கொள்ளும்போது, அவை நிறைய கனிமங்களை கொடுத்து முடி வளர்வதற்கான புரதங்களையும் கொடுக்க தொடங்கும்.” என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
மேலும், “இதோடு சேர்த்து நம்முடைய பழக்க வழக்கங்களில், ஆண்களாக இருந்தால் முடிந்தவரை தினசரி குளிக்க வேண்டும். பெண்களாக இருந்தால் அலுவலகத்திற்கு வேகமாக ஓட வேண்டிய சூழலில் தலைக்கு குளித்து காய வைக்க முடியாது, அந்த மாதிரி சமயத்தில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தலைக்கு குளித்துக் கொள்ள வேண்டும்; வாரத்திற்கு இரண்டு நாளாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி சில மணி நேரங்களாவது தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் பழக்கம் நம்மிடம் கொண்டு வர வேண்டும். அதோடு, சேர்ந்து நல்ல கரிசலாங்கண்ணி கீரை முடக்கத்தான் கீரை முசுமுசுக்கு, பொடுகிலை பொன்னாங்கண்ணி, கீழாநெல்லி எல்லாம் போட்டு காய்ச்சிய தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். உணவில் நல்ல இரும்பு சத்து நிறைந்த உணவுகளான கேழ்வரகு கம்பு நிறைய எடுத்துக் கொள்ளலாம்” என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“