தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு தினமும் வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முடியும் என்று சமூக ஊடக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சாத்விக் இயக்கத்தின் இணை நிறுவனர் சுபஹ் சரஃப் கருத்துப்படி, ஒரு பெண் தினமும் மூன்று வாரங்களுக்கு வெள்ளை பூசணிக்காய் ஜூஸ் குடித்தால், அப்பெண்ணின் வயிறு பகுதி தட்டை ஆவதுடன், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய்வதற்காக ஊட்டச்சத்து நிபுணரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: This is what happens to the body if you drink ash gourd juice for three weeks daily
"வெள்ளை பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. இதில் கலோரிகள் குறைவான அளவு உள்ளன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதில் அதிக நார்ச்சத்து இருக்கும் காரணத்தால் நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் இருக்கும். உடல் எடையை பராமரிக்க உதவியாக இருக்கும்" என்று ஊட்டச்சத்து நிபுணர் கனிக்கா மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
வெள்ளை பூசணிக்காயில் இயற்கையான டையூரிடிக் பண்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரைத் தக்கவைத்தல் மற்றும் வீக்கத்தைக் குறைக்க இது உதவுகிறது. அந்த வகையில், மூன்று முதல் நான்கு வாரங்களில் உங்கள் வயிற்றில் ஒரு தட்டையான தோற்றத்தைக் கொடுக்கும் என்று மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார். "கூடுதலாக, செரிமான நொதிகளைத் தூண்டி, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளை நீக்குவதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை இது ஊக்கிவிக்கிறது. இதன் காரத்தன்மை வயிற்றின் அமில அளவை சமநிலைப்படுத்துகிறது. உணவுக்குப் பின் ஏற்படும் அசௌகரியத்தை குறைக்கிறது" என்று மல்ஹோத்ரா கூறினார்.
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற பூசணிக்காய் சாறு பயன்படுகிறது. அதன்படி, "உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்கவும் உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதுடன் சீரான உடற்பயிற்சியை மேற்கொள்ளுதல் கூடுதல் பலன் அளிக்கும்" என்று மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.
கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன?
மற்ற அனைத்து உணவு வகைகள் மற்றும் பானங்களை போலவே அளவு மற்றும் தரத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
1. செரிமான கோளாறுகளை தவிர்க்க வெள்ளை பூசணிக்காய் ஜூசை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. உங்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏதேனும் இருந்தாலோ அல்லது மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டாலோ மருத்துவரை ஆலோசித்து இந்த ஜூசை குடிக்க வேண்டும்.
3. இதன் பலனை நீண்ட காலத்திற்கு அனுபவிக்க சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.