பெரும்பாலான வீடுகளில் மதிய உணவு என்ன செய்ய வேண்டும் என்ற டென்ஷன் காலையிலேயே தொடங்கி விடும். சாப்பாடு சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதனை சத்தாக கொடுப்பது மிகவும் அவசியம். அந்த வகையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் தக்காளி சாதம் எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இந்த சமையல் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வரகரிசி,
நெய்,
பிரியாணி இலை,
கிராம்பு,
ஏலக்காய்,
வெங்காயம்,
பச்சை மிளகாய்,
உப்பு,
தக்காளி,
மஞ்சள் தூள்,
கரம் மசாலா,
மல்லி தூள்,
கறிவேப்பிலை,
பட்டாணி மற்றும்
கொத்தமல்லி.
செய்முறை:
ஒரு கப் வரகரிசியை 10 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இனி, அடுப்பில் குக்கர் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும். இதில், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
இதன் பின்னர், நறுக்கிய பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சுமார் மூன்று நிமிடங்களுக்கு இதனை வதக்கிய பின்னர், நான்கு தக்காளியை அரைத்து இத்துடன் சேர்க்கவும். மேலும், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லி தூள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.
இதற்கடுத்து இரண்டு நிமிடங்களுக்கு பின்னர், கறிவேப்பிலை, பட்டாணி, கொத்தமல்லி சேர்த்து கலக்கவும். இதன் பின்னர், ஊற வைத்த வரகரசியை இதில் சேர்த்து கலக்க வேண்டும். இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, இரண்டு விசில் வைத்து எடுத்தால் சுவையான தக்காளி சாதம் ரெடியாகி விடும். இதன் சுவை எல்லோரும் விரும்பும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.