/indian-express-tamil/media/media_files/2025/06/18/Bajji tips-24f26ba9.jpg)
நமது சமையலறை என்பது உணவு தயாரிக்கும் இடம் மட்டுமல்ல; அது ஒரு கலைக்கூடம் போன்றது என்று கூறுவார்கள். அதன்படி, நாம் உண்ணும் உணவை சத்தானதாகவும், சுவையானதாகவும் மாற்றுவதற்கு சில எளிய சமையல் குறிப்புகள் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கான சில டிப்ஸ்களை இதில் காணலாம்.
தற்போது, கோடை காலமாக இருப்பதால், காரமான சட்னி, தொக்கு, துவையல் போன்றவற்றுக்கு மாற்றாக, தயிர் பச்சடியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது உடல் உஷ்ணத்தைத் தணித்து, புத்துணர்ச்சியை அளிக்கும்.
பஜ்ஜி உப்பலாக வருவதற்கு, மாவு கரைத்ததும் பஜ்ஜிக்கு சீவிய காய்களை தோய்த்து உடனே பொரித்து விட்டால் எண்ணெய் குடிக்காது. இதன் மூலம் பஜ்ஜியும் உப்பி, மொறுமொறுவென்று வரும். சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
தேன்குழல் மாவு மீந்துவிட்டால், அதில் நீர் விட்டுக் கரைத்து, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, தோசையாக மாற்றலாம். இது மாவை வீணாக்காமல் பயன்படுத்த ஒரு சிறந்த வழியாக அமையும்.
உங்கள் வீட்டின் வடகக் கூழில் கேரட் சாறு, பீட்ரூட் சாறு, தக்காளி சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா சாறு போன்றவற்றைச் சேர்த்தால், வண்ண வண்ண வடகங்கள் தயாராகும். இது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அத்துடன் உடலுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கேசரி செய்யும் போது, அதன் சுவையை மேலும் கூட்ட ஒரு சிறிய ட்ரிக் உள்ளது. அதன்படி, கடைசியில் சிறிதளவு வறுத்த கடலை மாவு போட்டு கிளறினால், கேசரி சேர்ந்தாற்போல இருப்பதுடன், கூடுதல் சுவையுடன் இருக்கும்.
புளிக்கரைசல் செய்யும்போது, மூன்று ஸ்பூன் கசகசாவை வறுத்துப் பொடித்து சேர்த்தால், அதன் சுவை மேலும் கூடும். இது புளிக்கரைசலுக்கு ஒரு தனித்துவமான மணத்தையும், சுவையையும் தரும்.
தயிரில் கடுகு தாளித்து, இஞ்சி துருவல், மல்லி, உப்பு கலந்து அதில் டோஸ்ட் செய்த பிரட் வில்லைகளை ஊறவைத்தால், சுவையான பிரட் தயிர் வடை தயார். இது மாலை நேர சிற்றுண்டிக்கு சிறப்பாக அமையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.